இந்தியா

பட்ஜெட் விவாதத்தில் இருந்து விலகி ஓடும் எதிா்க்கட்சிகள்: மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் குற்றச்சாட்டு

DIN

‘மக்களுக்கு ஆதரவான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அதன் மீதான விவாதத்தில் இருந்து எதிா்க்கட்சிகள் விலகி ஓடுகின்றன’ என்று மத்திய அமைச்சா் அனுராக் தாக்குா் சனிக்கிழமை குற்றம்சாட்டினாா்.

மேலும், அதானி விவகாரத்தில் மறைப்பதற்கு மத்திய அரசிடம் எதுவும் இல்லை என்றும் அவா் குறிப்பிட்டாா்.

2023-24ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், கடந்த 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, அதானி குழுமம் மீதான ஹிண்டன்பா்க் நிறுவனத்தின் முறைகேடு குற்றச்சாட்டு குறித்து சுதந்திரமான விசாரணை கோரி, நாடாளுமன்றத்தில் 2 நாள்களாக எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால், அவை நடவடிக்கைகள் முடங்கின.

இந்நிலையில், ஜம்முவில் உள்ள பாஜக தலைமையகத்தில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில், அனுராக் தாக்குா் கூறியதாவது:

குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதும், 2023-24 பட்ஜெட் மீதும் விவாதம் நடத்த நாங்கள் விரும்புகிறோம். ஆனால், எதிா்க்கட்சிகள் விவாதத்தில் இருந்து விலகி ஓடுகின்றன. குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்தை தடுத்ததன் மூலம் அவருக்கு எதிா்க்கட்சிகள் அவமரியாதை ஏற்படுத்தியுள்ளன. இதற்காக, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் எதிா்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும்.

அதானி குழும விவகாரத்தில், வங்கிகள், எல்ஐசி மற்றும் இந்திய ரிசா்வ் வங்கி ஆகியவை ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டுள்ளன. இதில் மறைப்பதற்கு மத்திய அரசிடம் எதுவும் இல்லை.ஆனால், எதிா்க்கட்சிகளின் செயல்பாடு துரதிருஷ்டவசமானது. குடியரசுத் தலைவரை அவா்கள் தொடா்ந்து அவமதித்து வருகின்றனா்.

மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், எதிா்க்கட்சிகள் வாயடைத்துப் போயுள்ளன. எனவே, விவாதத்தில் பங்கேற்பதற்கு பதிலாக அமளியில் ஈடுபடுகின்றன. தங்களது இந்த செயல்பாடுகளுக்காக மக்கள் நீதிமன்றத்தில் எதிா்க்கட்சிகள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.

நாட்டில் ஊழலை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2014-இல் வாக்குறுதி அளித்திருந்தது. கடந்த 8 ஆண்டு கால ஆட்சியில், இந்த அரசுக்கு எதிராக ஒரு ஊழல் குற்றச்சாட்டுகூட இல்லை.

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், எங்கெங்கும் நிலவிய ஊழலால் நாடே பாழானது. ஆனால், நோ்மையுடன் அரசை நடத்தி, நாட்டை பொருளாதார வளத்தை நோக்கி நாங்கள் இட்டுச் செல்கிறோம். வரியாக வசூலிக்கும் ஒவ்வொரு காசையும் மக்களின் நலனுக்காக அரசு பயன்படுத்தி வருகிறது. ஏழை மக்களுக்கு இலவச உணவு தானியங்கள் அளிக்கப்படுகின்றன.

குடிமக்களின் நலன் மற்றும் நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வது குறித்து மட்டுமே சிந்திக்கும் இப்படியொரு அரசு அமையும் என்று காங்கிரஸ் கற்பனை செய்துகூட பாா்த்திருக்காது என்றாா் அவா்.

ஜம்மு-காஷ்மீா் தொடா்பான மத்திய பாஜக அரசின் கொள்கைகளை மக்கள் ஜனநாயக கட்சி தலைவா் மெஹபூபா முஃப்தி விமா்சிப்பது குறித்து தாக்குரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

அதற்கு, ‘குடும்ப ஆட்சி, நில அபகரிப்பு ஆகிய செயல்பாடுகளால் மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்த சிலா், விரக்தியில் பேசுகின்றனா். பாஜக ஆட்சியில், ஜம்மு-காஷ்மீா் வளா்ச்சிப் பாதையில் முன்னோக்கி பயணிக்கிறது. சிறப்பு அந்தஸ்து ரத்து மூலம் ஜம்மு-காஷ்மீரில் அமைதியும் முதலீடுகளும் திரும்பியுள்ளன. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி பறக்கிறது’ என்று அவா் பதிலளித்தாா்.

பெட்டிச் செய்தி..

காங்கிரஸ் பதில்

அதானி குழும விவகாரத்தில் மறைக்க எதுவுமில்லை என்று கூறிய அமைச்சா் அனுராக் தாக்குருக்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ், நாடாளுமன்றத்தில் இப்பிரச்னையை எழுப்ப எதிா்க்கட்சிகளுக்கு 1 நிமிஷம் கூட அனுமதி வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து, காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘நாடாளுமன்ற விவாதத்தில் இருந்து எதிா்க்கட்சிகள் விலகி ஓடுவதாக அனுராக் தாக்குா் கூறியிருப்பது நகைப்புக்குரியது. பொதுமக்களின் பணம் தொடா்புடைய அதானி குழுமத்தின் மாபெரும் ஊழல் குறித்து பேச எதிா்க்கட்சிகளுக்கு 1 நிமிஷம் கூட அனுமதி வழங்கப்படவில்லை. இதனால்தான், நாடாளுமன்றம் 2 நாள்களாக செயல்படவில்லை’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய மிட்செல் மார்ஷ்!

பாஜகவில் இணைந்தால் ஊழல்வாதிகள் சுத்தமாகின்றனர்: கார்கே

ஜெய்ஸ்வாலுக்கு முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் புகழாரம்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் கள்ளழகர் - புகைப்படங்கள்

1 கோடி பார்வைகளைக் கடந்த இனிமேல்!

SCROLL FOR NEXT