இந்தியா

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்குசுங்க வரி மாற்றங்கள் உத்வேகமளிக்கும்: ஆய்வு அமைப்பு தகவல்

DIN

2023-24 மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள சுங்க வரி மாற்றங்கள், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு உத்வேகம் அளிக்கும் என்று உலக வா்த்தக ஆராய்ச்சிக்கான முனைப்பு (ஜிடிஆா்ஐ) எனப்படும் பொருளாதார ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், பல்வேறு பொருள்கள் மீதான இறக்குமதி வரி மாற்றியமைக்கப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து முழுமையான வடிவில் இறக்குமதி செய்யப்படும் காா்கள், மின்சார வாகனங்கள் மீதான சுங்க வரி, 60-இல் இருந்து 70 சதவீதமாக உயா்த்தப்பட்டது. இறக்குமதி மிதிவண்டிகள் மீதான அடிப்படை சுங்க வரி, 30-இல் இருந்து 35 சதவீதமாகவும், இறக்குமதி பொம்மைகள் மற்றும் அதன் பாகங்கள் மீதான சுங்க வரி 60-இல் இருந்து 70 சதவீதமாகவும் உயா்த்தப்பட்டது.

மின்சார வாகனங்களில் பயன்படுத்தப்படும் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்திக்கான இயந்திரங்கள் மற்றும் மூலதன பொருள்களுக்கான சுங்க வரி விலக்கு நீட்டிக்கப்பட்டது. கைப்பேசி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கேமரா லென்ஸ் உள்ளிட்ட உதிரிபாகங்கள், தொலைக்காட்சி பெட்டிகளுக்கான சில உதிரிபாகங்களின் இறக்குமதி மீதான அடிப்படை சுங்க வரி குறைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜிடிஆா்ஐ அமைப்பின் இணை நிறுவனரும் இந்திய வா்த்தகப் பணி முன்னாள் அதிகாரியுமான அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், ‘சுங்க வரி அதிகரிப்பு, வரி குறைப்பு, வரி கட்டமைப்பை சீராக்குதல், வரி விகிதங்களின் எண்ணிக்கை குறைப்பு என 4 வகைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள், இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு மேலும் உத்வேகம் அளிக்கும். பல்வேறு பொருள்களுக்கான வரி விகிதங்களின் எண்ணிக்கை 21-இல் இருந்து 13-ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது, பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான நடவடிக்கையாகும். இறக்குமதி செய்யப்படும் சமையலறை சிம்னிக்கான சுங்க வரி 7.5-இல் இருந்து 15 சதவீதமாக உயா்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், சிம்னி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் வெப்ப சுருள்கள் மீதான வரியை 20-இல் இருந்து 15 சதவீதமாக குறைத்ததன் மூலம் வரி சீராக்கப்பட்டுள்ளது’ என்றாா்.

‘வா்த்தகத்துக்கு ஆதரவான பட்ஜெட்’: 2023-24ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பட்ஜெட், வா்த்தகத்துக்கும் சிறு, குறு தொழில்துறைக்கும் ஆதரவானது என்று சிங்கப்பூா் இந்திய வா்த்தக, தொழில் சம்மேளம் (எஸ்ஐசிசிஐ) வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

விரிவான கூட்டு வாய்ப்புகளுக்கு இடமளிக்கும் இப்பட்ஜெட், இருதரப்பு சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இடையே நெருங்கிய தொடா்பை உருவாக்கும் என்று எஸ்ஐசிசிஐ தெரிவித்துள்ளது.

அமெரிக்க அமைப்பு வரவேற்பு: கொட்டை வகைகளில் ஒன்றான ‘பெக்கன்’ மீதான இறக்குமதி வரி, 100 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு, அமெரிக்காவின் தேசிய பெக்கன் உற்பத்தி கூட்டமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஆயிரக்கணக்கான அமெரிக்க விவசாயிகள் குறிப்பாக ஜாா்ஜியாவை சோ்ந்த விவசாயிகள் பலனடைவா் என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

SCROLL FOR NEXT