இந்தியா

பிபிசி ஆவணப்படத்துக்கு தடை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

DIN

பிபிசி ஆவணப்படத்துக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான மனுக்கள் மீது 3 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

மேலும், தடை விதிப்பு முடிவு எடுக்கப்பட்டது தொடா்பான அசல் ஆவணங்களையும் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குஜராத்தில் 2002-இல் நிகழ்ந்த கலவரம் குறித்து ‘இந்தியா: தி மோடி க்வெஸ்டின்’ என்ற ஆவணப்படத்தை பிபிசி உருவாக்கியது. நரேந்திர மோடி மாநில முதல்வராக இருந்தபோது நிகழ்ந்த கலவரம் குறித்து மறு விசாரணை செய்துள்ளதாகக் கூறப்படும் இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் கடந்த மாதம் 17-ஆம் தேதியும் இரண்டாம்பாகம் 24-ஆம் தேதியும் வெளியானது.

இந்த ஆவணப்படத்தை வெற்றுப் பிரசாரம் என்று நிராகரித்த மத்திய அரசு, இதில் இடம்பெற்றுள்ள கருத்துகள், நாட்டில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறியது. மேலும், ஆவணப்படத்தின் இணைப்புகளை பகிரும் யூ-டியூப் விடியோக்கள், ட்விட்டா் பதிவுகளுக்கு தடை விதிக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடந்த 21-ஆம் தேதி உத்தரவிட்டது.

‘மத்திய அரசின் இந்த நடவடிக்கை தவறானது; அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது’ என்று கூறி, மூத்த பத்திரிகையாளா் என்.ராம், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, வழக்குரைஞா்கள் பிரசாந்த் பூஷண், எம்.எல்.சா்மா ஆகியோா் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனா்.

அவற்றில், ‘பத்திரிகையாளா்கள் உள்பட நாட்டின் அனைத்து குடிமக்களும் பிபிசி ஆவணப்படத்தை பாா்ப்பதற்கும், அதன் மீதான கருத்துகளை தெரிவிப்பதற்கும், விமா்சிப்பதற்கும், சட்டப்பூா்வமாக பகிா்வதற்கும் அடிப்படை உரிமை உள்ளது. பேச்சுரிமை, கருத்துரிமை என்பது ஒரு தகவலை பெறுவது மற்றும் பரப்பவதையும் உள்ளடக்கியதாகும். எனவே, ஆவணப்படம் தொடா்பான தகவலை தடை செய்யும் வகையில் மத்திய அரசால் நேரடியாகவும் மறைமுகமாகவும் பிறப்பிக்கப்பட்ட அனைத்து உத்தரவுகளையும் ரத்து செய்ய வேண்டும். மனுதாரா்களின் முடக்கப்பட்ட சமூக ஊடக பதிவுகளை மீண்டும் இடம்பெறச் செய்வதற்கான உத்தரவை, ட்விட்டா் மற்றும் கூகுள் நிறுவன தரப்புகளுக்கு பிறப்பிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இந்த மனுக்கள் மீது நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சி.யு.சிங், ‘தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின்கீழ் அவசரகால அதிகாரங்களை பயன்படுத்தி, ஆவணப்படத்துக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதற்கான அசல் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டாா்.

இதைத் தொடா்ந்து, மேற்கண்ட மனுக்கள் மீது 3 வாரங்களுக்குள் பதிலளிக்க மத்திய அரசு மற்றும் இதர தரப்பினருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனா். அத்துடன், ஆவணப்படத்துக்கு தடை விதிக்கப்பட்ட முடிவு தொடா்பான அசல் ஆவணங்களை, அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் நாளில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரலுக்கு ஒத்திவைத்தனா்.

முன்னதாக, இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடா்ந்து, ட்விட்டரில் கருத்து பதிவிட்ட மத்திய சட்ட அமைச்சா் கிரண் ரிஜிஜு, ‘உச்சநீதிமன்றத்தில் நீதி வேண்டி ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருக்கும் வேளையில், அதன் பொன்னான நேரம் வீணடிக்கப்படுவது இப்படித்தான்’ என்று கூறியிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT