இந்தியா

கர்நாடகத்தில் நெய்யப்பட்ட அமைச்சரின் புடவை: நேரில் பார்வையிட்ட குடும்பத்தினர்

DIN

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து 5-ஆவது முறையாக புதன்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிகழ்வை மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அவரது மகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் நேரில் பார்வையிட்டனர்.

2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக. பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றுக் கொண்டார். 2019-ஆம் ஆண்டு ஜூலை மாதம், தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தற்போது, தொடர்ந்து 5-ஆவது முறையாக 2023-24-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்தார்.

தனது பட்ஜெட் உரையின்போது, உலகப் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் சீரான பொருளாதார வளர்ச்சியுடன் நடைபோடும் இந்தியா, உலகுக்கே ஓர் நம்பிக்கை நட்சத்திரம் என பெருமிதத்துடன் தெரிவித்தார். உலகின் முக்கிய நாடுகளுக்கு மத்தியில் அதிகபட்சமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி தற்போது 7 சதவீதமாக விளங்குவதாக தெரிவித்தார்.

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த நிகழ்வை மக்களவையின் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அவரது மகள் வாங்மாயி பிரகலா மற்றும் அவரின் நெருங்கிய உறவினர்கள் சிலரும் நேரில் பார்வையிட்டனர்.

கர்நாடகத்தில் நெய்யப்பட்ட அமைச்சரின் புடவை

பட்ஜெட் தாக்கலின் போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் அணிந்திருந்த புடவை, "இல்கல்' பட்டால் ஆன கர்நாடகத்தின் தர்வாத் மாவட்டத்தில் நெய்யப்பட்ட கைத்தறி புடவை ஆகும்.
 தர்வாத் பகுதியில் புவியியல் குறியீடு பெற்ற "காசுதி' என்னும் நெசவு கலையைப் பின்பற்றி கையால் நெய்யப்பட்டதாகும். அமைச்சர் அணிந்திருந்த புடவையின் எடை சுமார் 800 கிராம் எனக் கூறப்படுகிறது. காசுதி வகைப் புடவைகளில் பொதுவாக தேர், கோயில் கோபுரம், யானை, மான், மயில் மற்றும் தாமரை போன்றவற்றை உள்ளடக்கிய வடிவமைப்புகளால் நிறைந்திருக்கும். அமைச்சர் அணிந்திருந்த புடவையில் தேர், மயில் மற்றும் தாமரை மட்டுமே இடம்பெற்றிருந்தது.
 புடவையை வடிவமைத்த ஹாரத்தி கூறுகையில், "அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்காக 2 காசுதி புடவைகளை அனுப்பி வைத்தோம். பட்ஜெட் தாக்கலின் போது, அமைச்சர் அப்புடவையை அணிந்திருந்ததைத் தொலைக்காட்சியில் பார்த்த போது எங்களுக்கே இன்ப அதிர்ச்சி தான். நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம்' என்றார். அமைச்சர் நிர்மலா சீதாராமன், கர்நாடகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களைவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா? என்ன சொல்கிறது வானிலை

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

SCROLL FOR NEXT