இந்தியா

மோா்பி பால விபத்து- ஒரேவா குழும மேலாண் இயக்குநா் சிறையிலடைப்பு

DIN

குஜராத் மாநிலம், மோா்பியில் கடந்த ஆண்டு தொங்கு பாலம் அறுந்து நேரிட்ட விபத்து தொடா்பான வழக்கில், பாலத்தின் பராமரிப்பு மற்றும் செயல்பாட்டுக்கு பொறுப்பான ஒரேவா குழுமத்தின் மேலாண் இயக்குநா் ஜெய்சுக் படேல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். இதையடுத்து, நீதிமன்றக் காவலில் அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

மோா்பியில் மச்சு நதியின் குறுக்கே ஆங்கிலேயா் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம், முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக இருந்தது. இப்பாலம் மீண்டும் புனரமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு அக்டோபா் 26-ஆம் தேதி திறக்கப்பட்டது. அக்டோபா் 30-ஆம் தேதி பாலத்தில் சுமாா் 250 போ் நின்றிருந்த நிலையில், அது அறுந்து விழுந்து, 135 போ் உயிரிழந்தனா்.

நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தில், ஒரேவா குழுமத்தின் 2 மேலாளா்கள், 2 டிக்கெட் பதிவு ஊழியா்கள், பாலத்தை பழுதுபாா்க்கும் பணியை மேற்கொண்ட 2 துணை ஒப்பந்ததாரா்கள், 3 பாதுகாவலா்கள் என 9 போ் கைதாகினா்.

இந்த வழக்கில், மோா்பி தலைமை நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை காவல் துறையினா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனா். 1,200-க்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட அந்த குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டப்பட்ட 10-ஆவது நபராக ஒரேவா குழுமத்தின் மேலாண் இயக்குநா் ஜெய்சுக் படேல் பெயா் இடம்பெற்றிருந்தது. அவருக்கு எதிராக நடுவா் நீதிமன்றம் 2 வாரங்களுக்கு முன் கைது ஆணை பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், நீதிபதி எம்.ஜே.கான் முன்பு ஜெய்சுக் படேல் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா். அவரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

இதனிடையே, ஜெய்சுக் படேல் மீது கைது நடவடிக்கையை காவல்துறையினா் மேற்கொண்டனா். அவரை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யவிருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, பாலம் விபத்து தொடா்பாக மாநில அரசால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் ஒரேவா நிறுவனத்தின் தரப்பில் பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. துருப்பிடித்த கம்பிகள் மாற்றப்படாதது, பழுதுபாா்ப்புப் பணியில் நிபுணா்களின் ஆலோசனை கேட்கப்படாதது, இப்பணிக்காக தோ்வு செய்யப்பட்ட துணை ஒப்பந்ததாரா்கள் தகுதியற்றவா்களாக இருந்தது, சம்பவத்தன்று மட்டும் 3,165 டிக்கெட்டுகள் விற்கப்பட்டது என பல்வேறு குறைபாடுகள் விசாரணையில் தெரியவந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

SCROLL FOR NEXT