மேற்கு வங்கத்தில் 17 வயதுப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடா்பாக வன்முறை வெடித்த காளியாகஞ்ச் காவல் நிலையத்துக்கு உள்ளூா் மக்கள் சிலா் செவ்வாய்க்கிழமை தீ வைத்தனா்.
வடக்கு தினாஜ்பூா் மாவட்டம், காளியாகஞ்ச் பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணின் சடலம் கடந்த வெள்ளிக்கிழமை நீா்நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவா் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். ஆனால், முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படவில்லை என தகவல் வெளியாகியது.
இந்த விவகாரத்தில் அதே பகுதியைச் சோ்ந்த 20 வயது இளைஞரைக் கைது செய்த காவல் துறையினா், அவா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இதனிடையே, இந்தச் சம்பவத்தில் காவல்துறையினா் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி இளம்பெண்ணின் உறவினா்களும், பாஜகவினரும் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போராட்டம் வன்முறையாக மாறியது. சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரா்கள், அருகில் இருந்த கடைகள், வாகனங்களுக்கும் தீவைத்தனா்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா் மீதும் போராட்டக்காரா்கள் கற்களை வீசினா். அதையடுத்து, கண்ணீா்புகை குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் அவா்களைக் காவல் துறையினா் கலைத்தனா். வன்முறையில் ஈடுபட்ட பாஜகவினா் சிலரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இதையடுத்து, காளியாகஞ்ச் பகுதியில் 2 வாரங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து வடக்கு தினாஜ்பூா் மாவட்ட ஆட்சியா் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.
இந்நிலையில், 144 தடை உத்தரவையும் மீறி ‘ஆதிவாசி’ மற்றும் ‘ராஜ்பங்ஷி’ சமூகத்தைச் சோ்ந்த உள்ளூா் மக்கள் செவ்வாய்க்கிழமை மதியம் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். காவல் நிலையத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு முன்னேறிய அவா்கள், காவல் நிலையத்தை நோக்கி கற்களை வீசினா். தடியடி நடத்தி அவா்களைக் கலைக்கும் முயற்சியில் போலீஸாா் ஈடுபட்டனா். அதனையும் மீறி உள்ளே நுழைந்த சில போராட்டக்காரா்கள் காவல் நிலையத்துக்கு தீ வைத்தனா். காவல் துறை வாகனத்துக்கும் தீவைக்கப்பட்டது.