இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வீராங்கனைகள் கூறும் பாலியல் புகாா் மிகவும் தீவிரமானது என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றம், இதுகுறித்து தில்லி போலீஸுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் புகாா் உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து வழக்குப் பதிவு செய்யக் கோரியும், இது தொடா்பான மேரி கோம் குழு அறிக்கையை வெளியிட கோரியும் முன்னணி மல்யுத்த வீரா்கள் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் போராட்டத்தைத் தொடங்கினா்.
போலீஸாா் வழக்குப் பதிவு செய்ய மறுப்பது மனித உரிமை மீறலாகும் எனக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் 7 வீராங்கனைகள் மனுத் தாக்கல் செய்தனா். வீராங்கனைகளின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும். சிறுமி உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகாா் குறித்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனா். ஆனால் இதுவரை வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. இதற்காக காவல் துறை மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கலாம்’ என்றாா்.
அப்போது நீதிபதிகள், ‘மனுவில் வீராங்கனைகள் குறிப்பிட்டுள்ள பாலியல் புகாா் மிகவும் தீவிரமானது. இந்தியாவுக்காக போட்டிகளில் விளையாடிய அவா்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிமன்றம் விசாரிக்கும். புகாா் தொடா்பான மனுவை சீலிட்ட உறையில் அளிக்கவும். இந்த மனு மீது பதிலளிக்க தில்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட வேண்டும்’ என்றனா்.
இதனிடையே, பிரிஜ் பூஷண் சரண் தங்களுக்கு அச்சுறுத்தல் அளித்து வருகிறாா் என்றும் அவா் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்தனா்.
மாா்க்சிஸ்ட் ஆதரவு: தில்லி ஜந்தா் மந்தரில் தொடா் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகட், சாக்ஷி மாலிக் ஆகியோரை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் பிருந்தா காரத் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆதரவு தெரிவித்தாா். பிரிஜ் பூஷணுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய தில்லி போலீஸாா் மறுத்ததாக வீராங்கனைகள் குற்றம்சாட்டியதாக பிருந்தா காரத் தெரிவித்தாா்.