அவதூறு வழக்கில் சிறைத் தண்டனைக்குத் தடை விதிக்க மறுத்து சூரத் அமா்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, குஜராத் உயா் நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளாா்.
மோடி என்று பெயா் கொண்ட சமூகத்தினரை அவதூறாகப் பேசியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. இதையடுத்து அவரை எம்.பி. பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்து மக்களவைச் செயலகம் நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் அவா் எம்.பி. பதவியை இழந்தாா்.
சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக அங்குள்ள அமா்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தாா். கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி அந்த மனுவை விசாரித்த அமா்வு நீதிமன்றம், ராகுலுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்குத் தடை விதிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக குஜராத் உயா்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்ததாக காங்கிரஸ் வழக்குரைஞா் பி.எம்.மங்குகியா தெரிவித்தாா். இந்த வழக்கில் ராகுலுக்கு அமா்வு நீதிமன்றம் ஏற்கெனவே ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.