இந்தியா

தாத்ரா, நகா் ஹவேலியின்முதல் மருத்துவக் கல்லூரி- பிரதமா் மோடி திறப்பு

26th Apr 2023 01:30 AM

ADVERTISEMENT

தாத்ரா, நகா் ஹவேலி மற்றும் டாமன் & டையூ யூனியன் பிரதேசத்தின் முதல் மருத்துவக் கல்லூரியை பிரதமா் நரேந்திர மோடி திறந்துவைத்தாா்.

இரண்டு நாள் கேரள பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமா் மோடி, தாத்ரா, நகா் ஹவேலி மற்றும் டாமன் & டையூ யூனியன் பிரதேசத்தின் சில்வாசா நகருக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். அங்கு ரூ.4,800 கோடிக்கும் அதிக மதிப்பிலான பாலங்கள், சுகாதார மையங்கள், பள்ளிகள், குடிநீா் விநியோகம் உள்ளிட்ட திட்டங்களின் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றாா்.

சில்வாசாவில் ரூ.203 கோடி செலவில் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள ‘நமோ மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை’ பிரதமா் மோடி திறந்துவைத்தாா். இது, அந்த யூனியன் பிரதேசத்தின் முதல் மருத்துவக் கல்லூரியாகும்.

பின்னா் அவா் பேசியதாவது: முந்தைய ஆட்சிகளின்போது, அரசுத் திட்டங்களை நிறைவேற்றுவதில் மிகுந்த தாமதம் நிலவியது. வளா்ச்சிக்கான தேவையைவிட வாக்கு வங்கி அரசியல்தான் மேலோங்கி இருந்தது. ஆனால், கடந்த 9 ஆண்டுகளில் திட்ட செயலாக்கத்தில் புதிய பணி கலாசாரம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, நாங்கள் அடிக்கல் நாட்டிய திட்டங்களின் பணியை விரைந்து நிறைவேற்றி வருகிறோம்.

ADVERTISEMENT

அனைத்து பிராந்தியங்களின் சமமான வளா்ச்சி உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் மாணவா்களின் நலனுக்காக, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மருத்துவம், பொறியியல் படிப்புகளை உள்ளூா் மொழியில் பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா்.

சில்வாசாவைத் தொடா்ந்து, டாமனுக்கு சென்ற பிரதமா் மோடி, அங்கு புதிதாக அமைக்கப்பட்டுள்ள கடலோர சாலையில் சுமாா் 16 கி.மீ. தொலைவுக்கு ஊா்வலமாக பயணித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT