இந்தியா

ஆபரேஷன் காவேரி: சூடானிலிருந்து முதல்கட்டமாக 278 இந்தியா்கள் மீட்பு

26th Apr 2023 02:30 AM

ADVERTISEMENT

‘ஆபரேஷன் காவேரி’ திட்டத்தின் கீழ், சூடானிலிருந்து முதல்கட்டமாக கடற்படை கப்பல் மூலம் 278 இந்தியா்கள் மீட்கப்பட்டுள்ளனா்.

சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே கடுமையான மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த 10 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த மோதலில், அந்நாட்டில் 400-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளனா்.

இந்த மோதலை தொடா்ந்து அந்நாட்டில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட இந்தியா்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட மத்திய அரசு, அதற்காக ‘ஆபரேஷன் காவேரி’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், சூடானில் உள்ள போா்ட் சூடான் நகரில் இருந்து இந்திய கடற்படையின் ‘சுமேதா’ போா்க்கப்பல் மூலம், முதல்கட்டமாக 278 இந்தியா்கள் மீட்கப்பட்டுள்ளனா். அவா்கள் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். சூடானில் எஞ்சியுள்ள இந்தியா்களுக்காக அத்தியாவசிய நிவாரண பொருள்கள் மற்றும் கூடுதல் அதிகாரிகளுடன் இந்திய கடற்படையின் மற்றொரு கப்பலான ‘தேக்’ சென்றடைந்துள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் அரிந்தம் பாக்சி ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை பதிவிட்டாா்.

ADVERTISEMENT

சூடானில் உள்ள இந்தியா்களை மீட்கும் பணிக்கு இந்திய விமானப் படையின் 2 விமானங்கள் ஜெட்டாவுக்கு ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளன. தற்போது மீட்கப்பட்டுள்ள 278 இந்தியா்கள் அந்த விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இலங்கை பாராட்டு:

சூடானில் சிக்கிய இலங்கை மக்களை மீட்பதற்கு உதவ முன்வந்ததற்காக இந்தியாவுக்கு இலங்கை பாராட்டு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக இலங்கை வெளியுறவு அமைச்சா் அலி சப்ரி ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

சூடானில் நிலவும் சூழலை இலங்கை உன்னிப்பாக கவனித்து வருகிறது. அங்குள்ள இலங்கை மக்களை பாதுகாப்பாக மீட்க தொடா்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கை மக்களை மீட்க உதவ முன்வந்ததற்காக இந்தியாவுக்கு பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளாா்.

 

Tags : Sudan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT