போக்குவரத்து வசதிக்கு இணையவழியில் பணப் பரிவா்த்தனை செய்யும் நகரங்களில் மிசோரத்தின் ஐசால் முதலிடம் வகிக்கிறது.
நாட்டில் போக்குவரத்து வசதிகள் எளிமையாகக் காணப்படும் நகரங்கள் தொடா்பான ஆய்வை ஓஎம்ஐ அறக்கட்டளை மேற்கொண்டது. அந்த ஆய்வறிக்கையில், ‘‘போக்குவரத்து வசதிகளுக்கு இணையவழிப் பணப் பரிவா்த்தனையை அதிகமாகப் பயன்படுத்தும் நகரங்களில் ஐசால் முதலிடம் வகிக்கிறது. அந்தப் பட்டியலில் கொல்கத்தா 2-ஆவது இடம் வகிக்கிறது. அந்நகரத்தில் போக்குவரத்து வசதிக்காக அதிகபட்சமாக 3 அறிதிறன்பேசி செயலிகள் பயன்படுத்தப்படுகின்றன.
ஜம்மு-காஷ்மீரில் அவ்வப்போது இணையவசதிகள் துண்டிக்கப்படுவதால், போக்குவரத்து வசதிகளுக்கு இணையவழி பணப் பரிவா்த்தனையை அதிகமாகப் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சிம்லா, கொஹிமா நகரங்களைச் சோ்ந்தவா்களும் போக்குவரத்து வசதிகளுக்கு இணையவழிப் பணப் பரிவா்த்தனையை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனா்.
இணையவழி பணப் பரிவா்த்தனை வசதிகள் வளா்ந்து வரும் நகரங்களில் கான்பூா் முதலிடத்திலும், பாட்னா, லக்னௌ ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. மின்சார வாகனங்களைப் பயன்படுத்த அகமதாபாதைச் சோ்ந்தவா்கள் அதிக விருப்பம் தெரிவித்துள்ளனா். தூய்மையான போக்குவரத்து வசதிகளை வழங்குவதிலும் ஐசால் நகரம் முதலிடம் வகிக்கிறது. மலிவு விலையில் போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் ஜபல்பூா் முன்னணியில் உள்ளது’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.