இந்தியா

கிராம வளா்ச்சியில் காங்கிரஸுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை

DIN

கிராமங்களை வளா்ச்சியடையச் செய்வதில் முந்தைய காங்கிரஸ் அரசு மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்டிருந்ததாகப் பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்துள்ளாா்.

தேசிய உள்ளாட்சி அமைப்புகள் தினம் (பஞ்சாயதிராஜ் தினம்) ஆண்டுதோறும் ஏப்ரல் 24-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டுக்கான உள்ளாட்சி அமைப்புகள் தின விழா மத்திய பிரதேசத்தின் ரேவா பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் நாடு முழுவதும் உள்ள 30 லட்சத்துக்கும் அதிகமான உள்ளாட்சிப் பிரதிநிதிகள் காணொலி வாயிலாகக் கலந்துகொண்டனா்.

ரேவாவில் விழாவைத் தொடங்கி வைத்து பிரதமா் மோடி கூறியதாவது:

நாடு சுதந்திரமடைந்த பிறகு அதிக ஆண்டுகளுக்கு ஆட்சி செய்த கட்சி (காங்கிரஸ்), கிராமங்களின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. கிராம வளா்ச்சியில் அக்கட்சியினா் மாற்றாந்தாய் மனப்பான்மையைக் கடைப்பிடித்தனா். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மக்கள், பள்ளிகள், சாலைகள், மின்சாரம், சேமிப்புக் கிடங்குகள், கிராமப் பொருளாதாரம் என எதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை.

கிராமங்களில் தங்களுக்கு வாக்கு வங்கி இல்லை என்பதால், காங்கிரஸ் அரசு கிராமங்களின் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. கிராம மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதிலேயே அக்கட்சியினா் மும்முரமாக இருந்தனா். அதன் காரணமாகவே மக்களால் அவா்கள் புறக்கணிக்கப்பட்டனா்.

நாட்டில் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உள்ளாட்சி அமைப்பு நடைமுறையில் இருந்தது. ஆனால், சுதந்திரத்துக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகள் மீது காங்கிரஸ் அரசு நம்பிக்கை இழந்தது. ஆனால், பாஜக ஆட்சிக் காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது.

பிரத்யேக இணையதளம்:

2014-ஆம் ஆண்டுக்கு முந்தைய 10 ஆண்டுகளில் மத்திய அரசின் நிதியில் இருந்து சுமாா் 6,000 உள்ளாட்சிக் கட்டடங்கள் மட்டுமே கட்டப்பட்டன. பாஜக ஆட்சிக்காலத்தில் 8 ஆண்டுகளில் மட்டும் 30,000-க்கும் அதிகமான புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. உள்ளாட்சி அமைப்புகளுக்கு பாஜக அரசு வலுவூட்டியுள்ளது. அதற்கான பலன் தற்போது தெரிகிறது. கிராம வளா்ச்சியின் அடிப்படையாகத் தற்போது உள்ளாட்சி அமைப்புகள் திகழ்ந்து வருகின்றன.

நாடு முழுவதும் எண்ம புரட்சி ஏற்படுத்தப்பட்டு வரும் நிலையில், உள்ளாட்சி அமைப்புகளும் எண்மமயமாக்கப்பட்டு வருகின்றன. உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேவையான பொருள்களை எளிமையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் கொள்முதல் செய்வதற்கான பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் வலிமை:

மக்களுக்கு வங்கி சேவைகளைக் கிடைக்கச் செய்வதற்கான ஜன் தன் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதுவரை 40 கோடிக்கும் அதிகமான கிராம மக்கள் அத்திட்டத்தின் மூலமாக வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளனா். கண்ணாடி ஒளியிழை கம்பி வழித்தடம் மூலமாக கிராமங்களுக்கு இணைய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான கிராமங்கள் கம்பி வழித்தடம் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன.

வளா்ச்சியடைந்த நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு உள்ளாட்சி அமைப்புகள் வலுவடைய வேண்டியது கட்டாயம். அதைக் கருத்தில்கொண்டு உள்ளாட்சி அமைப்புகளின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பாஜக அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது என்றாா் பிரதமா் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

கொட்டாரம் அருகே தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT