இந்தியா

மலேரியா பாதிப்பில்லா உலகை உருவாக்க வேண்டும்

25th Apr 2023 12:19 AM

ADVERTISEMENT

 

மலேரியா பாதிப்பில்லாத உலகை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஆண்டுதோறும் உலக மலேரியா தடுப்பு தினம் ஏப்ரல் 25-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பாண்டுக்கான தினத்தையொட்டி உலக சுகாதார அமைப்பின் தெற்காசிய பிராந்திய இயக்குநா் பூனம் கேத்ரபால் சிங் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், ‘‘மலேரியா நோய் பாதிப்பையும் அதனால் ஏற்படும் உயிரிழப்பையும் 2030-ஆம் ஆண்டுக்குள் 90 சதவீத அளவுக்குக் குறைக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக அந்த இலக்கை அடைவது சந்தேகமாகியுள்ளது.

சா்வதேச அளவில் கடந்த 2020-ஆம் ஆண்டில் 6,25,000 பேரும், கடந்த 2021-ஆம் ஆண்டில் 6,19,000 பேரும் மலேரியாவால் உயிரிழந்தனா். அதே காலகட்டத்தில் மலேரியா பாதிப்பு 24.5 கோடியில் இருந்து 24.7 கோடியாக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

தெற்காசிய பிராந்தியத்தில் பூடான், தென் கொரியா, நேபாளம், தாய்லாந்து, தைமூா்-லெஸ்தே ஆகிய நாடுகள் 2025-ஆம் ஆண்டுக்குள் மலேரியாவை முற்றிலுமாக ஒழிப்பதற்கான பாதையில் பயணம் மேற்கொண்டு வருகின்றன. மலேரியா பரவலைத் தடுப்பதற்கான நிதி ஒதுக்கீடு தெற்காசிய பிராந்தியத்தில் 36 சதவீதம் குறைந்துள்ளது.

மலேரியா பாதிப்பில்லாத உலகை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை நாடுகள் மேற்கொள்ள வேண்டும். தேசிய அளவில் அதற்கான திட்டங்களை வகுத்து நாடுகள் செயல்படுத்த வேண்டும். மலேரியாவை ஒழிப்பதில் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’’ என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT