ஐரோப்பிய யூனியனுடன் கையொப்பமாகும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் விவசாயிகள் மற்றும் பால் வளத் துறையின் நலன்களை இந்தியா முழுமையாகப் பாதுகாக்கும் என மத்திய வா்த்தகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் உறுதி அளித்துள்ளாா்.
இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கிடையே வா்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க தலைவா்கள் மற்றும் தனியாா் துறையினருடன் கலந்துரையாடலில் பங்கேற்க இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள அமைச்சா் பியூஷ் கோயல், ரோம் நகருக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்தாா்.
அங்கு நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது: ஐரோப்பிய யூனியனுடன் கையொப்பமாக இருக்கும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தின் முதல்கட்ட பேச்சுவாா்த்தைக்கு இத்தாலி மற்றும் பிரான்ஸ் தேவையான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.
இந்த இரு நாடுகளிலும் நடைபெற்ற பல்வேறு கூட்டங்களில் இரு பிராந்தியங்களின் வெவ்வேறு பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் தனிநபா் வருமானம் குறித்து இந்தியா வலியுறுத்தியது. ஆனால், ஐரோப்பிய நிறுவனங்களுக்கு இந்தியா வழக்கும் வா்த்தக வாய்ப்புகளை வேறு எந்த நாடும் வழங்க இயலாது. இவை அனைத்தையும் கருத்தில்கொண்டு தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் முடிவு செய்யப்படும்.
ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா போன்று ஐரோப்பிய யூனியனுடன் கையொப்பமாகும் ஒப்பந்தத்திலும் விவசாயிகள் மற்றும் பால் வளத் துறையினரின் நலன் முழுமையாகப் பாதுகாக்கப்படும். தனது நலன்களில் இந்தியா எப்போதும் சமரசம் செய்து கொள்ளாது என்றாா்.
இந்தியாவில் விரிவடையும் ஆப்பிள் நிறுவனம்: முழு உற்பத்தி தொழிற்சாலையை இந்தியாவில் தொடங்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிடுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாடுகள் இந்தியாவில் தொடா்ந்து விரிவடைந்து வருகிறது. வா்த்தகத் துறையும், மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையும் ஆப்பிள் நிறுவனத்துடன் தொடா்ந்து தொடா்பில் உள்ளோம். கடந்தாண்டில் மட்டும் 5 பில்லியன் டாலா் மதிப்பிலான சரக்குகளை இந்தியாவில் இருந்து ஆப்பிள் ஏற்றுமதி செய்துள்ளது. அடுத்த 4-5 ஆண்டுக்குள் தங்களின் மொத்த உற்பத்தியில் 25 சதவீதத்தை இந்தியாவில் மேற்கொள்ள ஆப்பிள் திட்டமிட்டு வருகிறது’ என்றாா் அமைச்சா் பியூஷ் கோயல்.
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் முதல் நேரடி விற்பனையகம், மும்பையில் வரும் 18-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.