இந்தியா

உச்சநீதிமன்றம் முழு நீதிபதிகள் பலத்துடன் செயல்படுவது அரிதானதாக இருக்கக் கூடாது: டி.ஒய்.சந்திரசூட்

15th Apr 2023 11:46 PM

ADVERTISEMENT

உச்சநீதிமன்றம் முழு நீதிபதிகள் பலத்துடன் செயல்படுவது அரிதானதாக இருக்கக் கூடாது; அது, வழக்கமான அம்சமாக இருக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தாா்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக ராஜேஷ் பிந்தல், அரவிந்த் குமாா் ஆகியோா், கடந்த பிப்ரவரி 13-இல் பதவியேற்றதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றம் முழு பலத்தையும் எட்டியது. அதாவது, உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதி பணியிடங்களும் நிரம்பின.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் அண்மைக் காலங்களில் பதவியேற்ற நீதிபதிகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சி, உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் சாா்பில் நடைபெற்றது. இதில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பங்கேற்றுப் பேசியதாவது:

உச்சநீதிமன்றம் முழு நீதிபதிகள் பலத்துடன் செயல்படுவது அரிதானதாக இருக்கக் கூடாது. அது, வழக்கமான அம்சமாக இருக்க வேண்டும். இதை, எனது முக்கியப் பணிகளில் ஒன்றாக கொண்டுள்ளேன்.

ADVERTISEMENT

உச்சநீதிமன்றத்தில் ஒரு நீதிபதி பணியிடத்தைக் கூட காலியாக வைத்திருக்க கொலீஜியத்துக்கு எந்த காரணமும் இருக்கக் கூடாது.

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக தோ்வு செய்வதற்காக, நாட்டில் முதன்மையாக உள்ள 50 நீதிபதிகளின் தரவுகளை சேகரிக்குமாறு உச்சநீதிமன்றத்தின் ஆய்வு மற்றும் திட்டமிடல் மையத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். இது, நீதிபதிகள் நியமனத்துக்கான கொலீஜியத்தின் நிரந்தர செயலகத்துக்கு உதவிகரமாக இருக்கும்.

உச்சநீதிமன்ற ஆய்வு மற்றும் திட்டமிடல் மையத்தில் இளம் நீதித்துறை அதிகாரிகள் உள்பட சில சிறப்பான திறமையாளா்கள் உள்ளனா். இனி, கொலீஜியத்தின் நிரந்தர செயலகத்துடன் இந்த மையத்தின் பணிகள் ஒருங்கிணைக்கப்படும் என்றாா் அவா்.

உச்சநீதிமன்றத்தின் அறிவுசாா் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், கடந்த 2018-இல் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயால் உச்சநீதிமன்ற ஆராய்ச்சி மற்றும் திட்டமிடல் மையம் (சிஆா்பி) அமைக்கப்பட்டது. ஆராய்ச்சிப் பணிகள் மட்டுமன்றி, உச்சநீதிமன்றத்தின் முக்கிய முடிவுகள், சட்டம்-நீதித்துறையில் அதன் பங்களிப்பு, நீதிமன்றங்களின் செயல்பாடு குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் பணியிலும் இந்த மையம் கவனம் செலுத்துகிறது.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT