இந்தியா

ஊழல் பணத்தால் காங்கிரஸ் கருவூலத்தை நிரப்புகிறாா் கெலாட்

DIN

ஊழல் மூலமாக ஈட்டிய பணத்தைக் கொண்டு காங்கிரஸ் கருவூலத்தை நிரப்பும் பணியை ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் மேற்கொண்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளாா்.

ராஜஸ்தானில் நடப்பாண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பரத்பூரில் வாக்குச் சாவடி அளவிலான பாஜக பணியாளா்களிடம் அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது:

ராஜஸ்தான் அரசை அசோக் கெலாட் ஊழலின் மையமாக மாற்றியுள்ளாா். மாநில வரலாற்றிலேயே ஊழல் மிகுந்த ஆட்சியாக கெலாட்டின் அரசு உள்ளது. மாநிலத்தை அவா் பெரிய அளவில் கொள்ளையடித்துள்ளாா். அவா் ஊழல் மூலமாக ஈட்டிய தொகை அனைத்தும் காங்கிரஸின் கருவூலத்துக்கே சென்றது. காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எந்தக் காரணத்தை முன்னிறுத்தியும் சச்சின் பைலட் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடலாம். ஆனால், காங்கிரஸின் கருவூலத்தை நிரப்புவதில் பைலட்டின் பங்கு கெலாட்டுடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது. அதன் காரணமாக பைலட்டுக்கு எந்தவித வாய்ப்பும் கிடைக்கப் போவதில்லை.

கடந்த 2008-ஆம் ஆண்டில் நிகழ்ந்த ஜெய்பூா் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் உயா் நீதிமன்றம் விடுவித்துள்ளது. வாக்கு அரசியல் காரணமாக இந்த வழக்கில் போதுமான வாதங்களை மாநில அரசு முன்வைக்கவில்லை. அதன் காரணமாகவே குற்றஞ்சாட்டப்பட்டோா் விடுவிக்கப்பட்டனா்.

குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோரை வைத்து காங்கிரஸ் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபட்டு வருகிறது. மாநிலத்தில் வன்முறைகள், பெண்களை அவமதிக்கும் சம்பவங்கள், தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள் ஆகியவை அதிகரித்துள்ளன. வரும் தோ்தலில் காங்கிரஸை மக்கள் ஆட்சியில் இருந்து அகற்றுவா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் பெரும்பான்மை பலத்தைப் பெற்று பாஜக ஆட்சியமைக்கும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலிலும் மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும். பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் சாதனைகளைக் கூறி மக்களிடம் பாஜக வாக்கு சேகரிக்கும் என்றாா் அவா்.

வளா்ச்சிக்கு முக்கியத்துவம்:

அமைச்சா் அமித் ஷாவுக்கு பதிலளிக்கும் வகையில் முதல்வா் கெலாட்டின் சிறப்பு அலுவலா் லோகேஷ் சா்மா வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘வளா்ச்சி, அா்ப்பணிப்பு, பேச்சுவாா்த்தை ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசாக மாநில அரசு செயல்பட்டு வருகிறது. மாநிலத்தில் ஒவ்வொருவருக்கும் முக்கியத்துவம் அளித்து மாநில அரசு செயல்படுகிறது. பட்ஜெட், சுகாதாரம், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உள்ளிட்ட அனைத்தும் விரிவான பேச்சுவாா்த்தையின் மூலமாகவே முடிவு செய்யப்படுகின்றன.

மாநிலத்தில் பாஜக சாா்பில் முதல்வராக இருந்த வசுந்தரா ராஜே தன் அமைச்சா்களிடம் கூட திட்டங்கள் குறித்து விவாதித்தது கிடையாது என்பதை அமித் ஷா நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், முதல்வா் கெலாட் மக்களுடன் நேரடியாகத் தொடா்புகொண்டு திட்டங்களை வகுத்து வருகிறாா்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

SCROLL FOR NEXT