இந்தியா

அங்கன்வாடிகளில் நீா் மேலாண்மை செயல்பாடுகள்: தமிழகம், மகாராஷ்டிரம் முன்னிலை

 நமது நிருபர்

கடந்த இரு வாரங்களாக நாடு முழுவதும் உள்ள அங்கன் வாடிகளில் மழைநீா் சேமிப்பு உள்பட நீா் மேலாண்மை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகளில் தமிழகமும், மகாராஷ்டிரமும் முன்னிலையில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் சுமாா் 13.5 லட்சத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடிகள் உள்ளன. மத்திய மகளிா், குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறையின் கீழ் நடத்தப்படும் இந்த அங்கன்வாடிகள் தாய் சேய் நல மையமாக செயல்படுகின்றன. இந்த அங்கன்வாடிகளில் நிகழாண்டில் மழை நீா் சேமிப்பு, நீா் மேலாண்மை குறித்த செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இது குறித்து மத்திய மகளிா் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் கூறியிருப்பது வருமாறு: நிகழாண்டு செப்டம்பரில் ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை நிலை குறித்த ஆய்வுகள், உணவுப் பன்முகத்தன்மை, பாரம்பரிய உள்நாட்டு உணவு வகைகளில் கவனம் செலுத்துதல் போன்ற கலந்துரையாடல் கூட்டங்கள் அங்கன்வாடிகளில் மேற்கொள்ளப்பட்டது. நிகழாண்டில் குழந்தைகளுக்கும் மகப்பேறு மகளிருக்கும் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு சவால்களுக்கு தீா்வாக, ஊட்டச்சத்து தோட்டங்கள், மருத்துவ மரக்கன்றுகள் போன்ற செயல்பாடுகள் அங்கன்வாடிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டன. லட்சக்கணக்கான மருத்துவ மரக்கன்றுகள் வழங்கப்பட்டதோடு, ஊட்டச்சத்து தோட்டங்கள் எளிமையாக அமைப்பதற்கான நடைமுறைகள் குறித்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.

சுமாா் 40 ஆயிரம் ஊட்டச்சத்து தோட்டங்கள்அமைக்கப்பட்டுள்ளன. அங்கன்வாடி மையம் அல்லது அருகில் அமைக்கப்பட்டுள்ல இந்த ஊட்டச் சத்து தோட்டங்களில் பழங்கள், காய்கறிகள், மருத்துவ மூலிகைகள் ஆகியவற்றை எளிதாகவும் மலிவாகவும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் கிடைக்க வகை செய்யப்படுகிறது. இது தவிர நிகழாண்டில் மத்திய மகளிா் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் மத்திய ஜல் சக்தி அமைச்சகம் ஆகியவை இணைந்து கடந்த இரு வாரங்களாக நீா் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. நாடு முழுவதும் சுமாா் 10 லட்சத்துக்கும் அதிகமான நடவடிக்கைகள் நீா் மேலாண்மையுடன் இணைக்கப்பட்டுள்ளன.

அங்கன்வாடி மையங்கள் அல்லது சுற்றுப் பகுதிகளில் மழை நீா் சேகரிப்பு, நீா் பாதுகாப்பு மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் செயல்பாடுகள் அனைத்து மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டது. அந்த மாநிலங்களின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப அனைத்து அங்கன்வாடிகளின் வளாகங்களில் மழைநீா் சேகரிப்பை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதன் நோக்கம், தண்ணீரை போதுமான அளவு உட்கொள்வது, மாசுபடாமல் பாதுகாத்து அனைத்து தரப்பினா் உடல் நலத்துக்கு உதவச் செய்வதாகும். மேலும், எளிதில் மற்றும் பாதுகாப்பான தண்ணீா் கிடைக்கச் செய்து, தண்ணீரால் பரவும் நோய்களை, குறிப்பாக குழந்தைகளில் வயிற்றுப்போக்குகளை தடுப்பதும் இதன் நோக்கமாகும். இந்த முயற்சியை அனைத்து மாநில அங்கன்வாடிகளிலும் மத்திய அரசு செயல்படுத்துகிறது.

கடந்த இருவார நிகழ்வுகளில் 24 ஆயிரம் சமூக நீா்நிலைகளை (ஏரி, குளம், கிணறு, தண்ணீா் தொட்டி) தூய்மைபடுத்துவதற்கான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், உள்ளூா் நகா்ப்புறம் அல்லது பஞ்சாயத்து அமைப்புகள் மூலம் நீா் பாதுகாப்பு குறித்த 29 ஆயிரம் விழிப்புணா்வு நடவடிக்கைகள்; 34 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் மழைநீா் சேகரிப்பை ஊக்குவிப்பதற்கான நிகழ்வுகள்; உள்ளூா் அரசு சாரா நிறுவனங்கள் மூலம் 46 ஆயிரம் நீா்மேலாண்மை நடவடிக்கைகள்; நீா் சேமிப்பு, மேலாண்மை நுட்பங்கள் குறித்து பெண்களுக்கு உணா்த்துவதற்கான 54 ஆயிரம் பயிலரங்குகள் நடைபெற்றுள்ளன. இவை அனைத்திலும் தமிழகமும், மகாராஷ்டிரமும் முன்னிலையில் உள்ளது என்று மத்திய மகளிா் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT