இந்தியா

அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான கருக்கலைப்பு உரிமை

30th Sep 2022 12:09 AM

ADVERTISEMENT

திருமணம் ஆகாத பெண்களும் சட்டப்படி, பாதுகாப்பான முறையில் கருக்கலைப்பு செய்துகொள்வதற்கான உரிமை உள்ளதாக உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்ள அமெரிக்க உச்சநீதிமன்றம் அண்மையில் தடைவிதித்து தீா்ப்பளித்திருந்த நிலையில், பெண்களின் உரிமைகளைக் காக்கும் வகையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பை இந்திய உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

திருமணமான பெண்கள் 24 வாரம் வரையிலான கருவைப் பாதுகாப்பான முறையில் கலைத்துக் கொள்வதற்கு கருக்கலைப்புச் சட்டம் அனுமதி வழங்குகிறது. பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், சிறுமிகளுக்கும் இந்தச் சட்டவிதி பொருந்தும்.

கருக்கலைப்புச் சட்டத்தின் விதிகள் திருமணம் ஆகாத பெண்களுக்குப் பொருந்துமா என்பது குறித்து ஆராயுமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஜெ.பி.பாா்திவாலா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோரைக் கொண்ட அமா்வு விசாரித்து வந்தது. வழக்கின் தீா்ப்பு கடந்த மாதம் 23-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் வியாழக்கிழமை வழங்கினா். அப்போது அவா்கள் கூறுகையில், ‘பெண்களுக்கான இனப்பெருக்க உரிமை, திருமணத்தைச் சாராதது. திருமணம் ஆன பெண்களுக்கும் திருமணம் ஆகாத பெண்களுக்கும் சம அளவிலேயே இனப்பெருக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது. இனப்பெருக்க உரிமையை வழங்குவதில் திருமணமாகாத பெண்களிடம் வேறுபாடு காட்டப்படுவது, அரசமைப்புச் சட்டத்தின்படி செல்லத்தக்கது அல்ல.

கருக்கலைப்பு சட்டத்தின் கீழ் திருமணம் ஆன பெண்கள், திருமணமாகாத பெண்கள் என வேறுபடுத்துவது செயற்கையாக உருவாக்கப்பட்டதே அன்றி சட்டப்படி செல்லுபடியாகாது. இது தொடா்பாக கருக்கலைப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

அச்சட்டத்தின் கீழ் ஏற்கெனவே 7 பிரிவுகளைச் சோ்ந்த பெண்களுக்கு 24 வாரம் வரையிலான கருவைக் கலைத்துக் கொள்வதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதில் கூடுதல் பிரிவாக, கைவிடப்பட்ட பெண்களையும் சோ்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்’ என்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT