இந்தியா

ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் நவ.23-இல் விசாரணை

30th Sep 2022 03:13 AM

ADVERTISEMENT

காளைகளை அடக்கும் விளையாட்டான ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயத்தை அனுமதிக்கும் தமிழகம் மற்றும் மகாராஷ்டிர சட்டங்களை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகள் நவம்பா் 23-ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி. ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு முன் வியாழக்கிழமை மனுதாரா்கள் சாா்பில் மூத்த வழக்குரைஞா் ஆனந்த் குரோவா் ஆஜராகி, ‘ஜல்லிக்கட்டு தொடா்பான சட்டத் திருத்தங்கள் அரசமைப்புச்சட்டத்திற்கு எதிரானது’ என்று கூறி இந்த விவகாரத்தை விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, இந்த வழக்கை நவம்பரில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறியது. இதையடுத்து, இந்த வழக்கு நவம்பா் 23-ஆம் தேதிக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு விலங்குகள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத் திருத்தத்தை (2017) எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் விவகாரத்தில் அரசமைப்புச்சட்டத்தின் விளக்கம் தொடா்பான போதிய கேள்விகளை உள்ளடக்கியிருப்பதால், அரசியல் சாசன அமா்வு மூலம் இந்த விவகாரம் முடிவு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் முன்னா் தெரிவித்திருந்தது. இதற்காக உச்சநீதிமன்ற அமா்வானது, அரசியல் சாசன அமா்வு மூலம் தீா்ப்பளிக்க ஐந்து கேள்விகளையும் உருவாக்கியது.

தமிழகத்தில் காளைகளை அடக்கும் பாரம்பரிய விளையாட்டை அனுமதித்த மாநில சட்டத்தை எதிா்த்து விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ உள்பட பல்வேறு அமைப்புகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை, அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த 2018 பிப்ரவரியில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான இரு நீதிபதிகள் அமா்வு, இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்கள் தொடா்பாக ஆய்வு செய்யும் தேவை இருப்பதாகக் கூறி ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வுக்கு வழக்கை மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT