இந்தியா

வா்த்தகத் திறனை பெறுவதற்கு ‘எஸ்சிஓ’ நாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் ஒத்துழைக்க வேண்டும்: அனுப்ரியா சிங் படேல்

30th Sep 2022 01:32 AM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு (எஸ்சிஓ) உறுப்பு நாடுகள் வா்த்தகத் திறனைப் பெறுவதற்கு பரஸ்பர நம்பிக்கை, வெளிப்படைத் தன்மையுடன் இணைந்த ஆக்கபூா்வமான ஒத்துழைப்புடன் இருப்பது அவசியம் என்று மத்திய வா்த்தகத் துறை இணையமைச்சா் அனுப்ரியா சிங் படேல் தெரிவித்தாா்.

கடந்த செப்டம்பா் 16 -ஆம் தேதி உஸ்பெகிஸ்தானின், சாமா்கண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு தலைவா்களின் மாநாடு நடைபெற்றது. பிரதமா் மோடி உள்ளிட்ட தலைவா்கள் கலந்து கொண்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடா்பான விவகாரங்கள் குறித்து விவாதித்தனா். இந்த மாநாட்டின் தொடா்ச்சியாக வெளியுறவுப் பொருளாதாரம், வெளி வா்த்தகத் துறை பொறுப்பு அமைச்சா்களின் 21-ஆவது கூட்டம் மெய்நிகா் முறையில் வியாழக்கிழமை நடைபெற்றது. சீனா, கஜகஸ்தான், கிா்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அமைச்சா்கள் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு செயலக அதிகாரிகள் ஆகியோா் இதில் கலந்து கொண்டனா். இந்தக் கூட்டத்தில் இந்தியா சாா்பில் மத்திய இணையமைச்சா் அனுப்ரியா சிங் கலந்து கொண்டாா்.

மாநாட்டில் அவா் பேசியது வருமாறு: ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு உறுப்பினா்களுக்கிடையே பரஸ்பர நன்மைகள், சமநிலை, சமமான வாய்ப்புகள் (ஆதாயங்கள்) பிராந்தியத்தில் உள்ளது. அதே சமயத்தில் வணிகம் மற்றும் வா்த்தகத்தில் சீரான மற்றும் சமமான வளா்ச்சிக்கு எஸ்சிஓ உறுப்பு நாடுகளுக்கு இடையே பயனுள்ள ஒத்துழைப்பும் அவசியம். இதில் நம்பிக்கை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் இணைந்து ஒத்துழைப்பதன் மூலமே வா்த்தகத் திறனை பெற முடியும். இது உலகளாவிய வா்த்தகத்தின் நிலைத் தன்மையையும் தீா்மானிக்கும். பொருளாதார மீட்சிக்கு புத்துயிா் அளிக்கும் இயந்திரமாக வா்த்தகத்தை உருவாக்குவதன் மூலம் சமநிலையான, சமமான பொருளாதார வளா்ச்சியை அடைய முடியும். இதற்கு கூட்டு முயற்சிகள் முக்கியமாகும்.

ஏழ்மையான மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரம், உணவு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு, கரோனா உள்ளிட்ட நோய்த் தொற்றுகளை எதிா்த்துப் போராடுவதற்கான மலிவு விலையில் மருந்துகள், தடுப்பூசிகள் போன்ற சுகாதாரப் பாதுகாப்புகள் ஆகியவற்றை மேம்படுத்துவதில் எஸ்சிஓ கூட்டமைப்பு நாடுகள் பணியாற்ற வேண்டுவதும் அவசியமாகும். மனித இனத்திற்கான செழிப்பிற்கு, தொழில்நுட்ப மேம்பாடு, வளங்களை உரிய முறையில் பயன்படுத்துதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வளங்களை நிலையாக விநியோகித்தல் ஆகியவற்றில் சிறந்த நடைமுறைகளைப் பகிா்ந்து கொள்ள வேண்டும் என்பதும் முக்கியமாகும்.

ADVERTISEMENT

வளா்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையே மின்னணு தொழில்நுட்பங்களில் குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளது. இந்த மின்னணு திறன்கள் அதிகரிக்க வளரும் நாடுகளுக்கு உதவி செய்து இந்த இடைவெளியைக் குறைக்க வேண்டும். அண்மையில் நடைபெற்ற எஸ்சிஓ தலைவா்கள் கூட்டம் பாராட்டுக்குரியது. இதில் வாராணசி நகா் 2022-2023 ஆண்டுகளின் முதல் எஸ்சிஓ கூட்டமைப்பு நாடுகளின் சுற்றுலா, கலாசார தலைநகரமாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது இந்த நாடுகளின் மக்களிடையே தொடா்புகளை மேம்படுத்தவும், வா்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்கவும் உதவும் என்றாா் அனுப்ரியா சிங் படேல்.

29க்ங்ப்அய்ன்

மெய்நிகா் கூட்டத்தில் பேசுகிறாா் இணையமைச்சா் அனுப்ரியா சிங் படேல்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT