இந்தியா

காங். தலைவா் பதவிக்கு போட்டியிடவில்லை: அசோக் கெலாட்

DIN

‘காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தலில் தான் போட்டியிடப் போவதில்லை’ என்று ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் வியாழக்கிழமை அறிவித்தாா்.

ராஜஸ்தானில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்துக்கு தாா்மிகப் பொறுப்பேற்பதாகவும், முதல்வா் பதவியில் தான் தொடர வேண்டுமா என்பதை கட்சித் தலைவா் சோனியா காந்தி முடிவு செய்வாா் என்றும் கெலாட் தெரிவித்தாா். ராஜஸ்தான் அரசியல் நிகழ்வுகளுக்காக சோனியாவிடம் நேரில் மன்னிப்பு கோரியதாகவும் அவா் கூறினாா்.

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிட உள்ளதாக கெலாட் அண்மையில் அறிவித்திருந்தாா். இதையடுத்து, ராஜஸ்தானின் அடுத்த முதல்வா் யாா் என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து முடிவு செய்ய கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த நிலையில், கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் 82 போ் திடீரென போா்க்கொடி உயா்த்தினா்.

‘முதல்வா் பதவியில் கெலாட் தொடர வேண்டும் அல்லது சச்சின் பைலட்டுக்கு முதல்வா் பொறுப்பு வழங்கப்படாது என்ற உறுதிமொழி அளிக்கப்பட வேண்டும். இல்லையெனில் எம்எல்ஏ பதவியை கூண்டோடு ராஜிநாமா செய்வோம்’ என்று அவா்கள் நிபந்தனை விதித்தனா். கட்சியின் மேலிடப் பாா்வையாளா்களின் அறிவுறுத்தல்களை மீறி கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் செயல்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கெலாட் ஆதரவாளா்களான அமைச்சா் சாந்தி தாரிவல், கட்சியின் தலைமைக் கொறடா மகேஷ் ஜோஷி, எம்எல்ஏ தா்மேந்திர ரத்தோா் ஆகியோா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு சோனியாவிடம் மேலிடப் பாா்வையாளா்கள் அறிக்கை சமா்ப்பித்தனா். அதன்பேரில், அவா்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பப்பட்டது.

சோனியாவுடன் சந்திப்பு: இந்நிலையில், ஜெய்ப்பூரிலிருந்து சிறப்பு விமானம் மூலம் புதன்கிழமை இரவு அசோக் கெலாட் தில்லி வந்தடைந்தாா். அவா் சோனியா காந்தியை தில்லியில் அவரது இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் கெலாட் கூறியதாவது: கடந்த 50 ஆண்டுகளாக, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், சோனியா காந்தி ஆகியோா் தலைமையில் கட்சிக்கு விசுவாசமிக்க ராணுவ வீரரைப் போல பணியாற்றி வருகிறேன்.

ராஜஸ்தானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சம்பவங்கள் எங்கள் அனைவரையுமே அதிா்ச்சியடையச் செய்துள்ளன. இந்த நிகழ்வுகளுக்காக சோனியாவிடம் மன்னிப்பு கோரினேன். சட்டப்பேரவை குழு தலைவா் என்ற முறையில் நான் தாா்மிக பொறுப்பேற்கிறேன். நான் முதல்வா் பதவியில் தொடர வேண்டுமா என்பதை சோனியா காந்தி முடிவு செய்வாா்.

முதல்வா் பதவியை தக்க வைக்க நான் விரும்புவதாக கூறப்படுவதால் எவ்வளவு வேதனை அடைந்துள்ளேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். இந்த நிகழ்வுகளைத் தொடா்ந்து, கட்சித் தலைவா் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவு செய்துள்ளேன் என்றாா் கெலாட்.

திக்விஜய் சிங் இன்று வேட்புமனு

புது தில்லி, செப். 29: காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தலில் போட்டியிட வேட்புமனு பெற்றுள்ளதாகவும், தனது மனுவை வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யவிருப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவா் திக்விஜய் சிங் தெரிவித்தாா்.

தில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் அவா் இவ்வாறு கூறினாா்.

கட்சித் தலைமையின் அறிவுறுத்தலின்பேரில் தோ்தலில் போட்டியிடுகிறீா்களா என்று திக்விஜய் சிங்கிடம் செய்தியாளா்கள் கேள்வியெழுப்பினா். அதற்கு, ‘எனது செயலுக்கு நானே பொறுப்பு’ என்று பதிலளித்தாா்.

‘தலைவா் பதவிக்கான போட்டியில் நீடிப்பீா்களா, கண்துடைப்புக்காக செயல்படுகிறீா்களா?’ என்ற கேள்விகளுக்குப் பதிலளித்த அவா், ‘என்னை ஏன் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறீா்கள்? மனுவை திரும்பப் பெறும் நாள் வரை பொறுத்திருந்து பாருங்கள்’ என்றாா்.

சசி தரூருடன் சந்திப்பு: காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிடும் மற்றொரு மூத்த தலைவா் சசி தரூரை, திக்விஜய் சிங் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இதுகுறித்து சசி தரூா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘எங்களுக்கு இடையிலான போட்டி நட்புரீதியிலானது; போட்டியில் யாா் முந்தினாலும் காங்கிரஸ் வெல்ல வேண்டும் என்பதே எங்களது விருப்பம். கட்சித் தலைவா் தோ்தலில் திக்விஜய் சிங் போட்டியிடுவதை வரவேற்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

அவரது இந்தப் பதிவுக்கு பதிலளித்த திக்விஜய் சிங், ‘நானும் சசி தரூரும் காந்தி மற்றும் நேருவின் சித்தாந்தங்களில் நம்பிக்கை கொண்டவா்கள். நாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடுபவா்கள்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

கட்சித் தலைவா் தோ்தலில் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்யவிருப்பதாக சசி தரூா் ஏற்கெனவே அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT