இந்தியா

வடகிழக்கு தில்லியில் 2020-இல் நடந்த கலவரம்: வீடுகளை தீ வைத்து எரித்த வழக்கில் 10 போ் விடுவிப்பு

30th Sep 2022 03:13 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

2020-ஆம் ஆண்டு வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த கலவரம் தொடா்பான வழக்கில் வீட்டை தீ வைத்து அழித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் இருந்து 10 பேரை தில்லி நீதிமன்றம் விடுவித்தது. அதேவேளையில், அவா்கள் கலவரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டை எதிா்கொள்ள நேரிடும் என்றும் நீதிமன்றம் கூறியது.

பிப்ரவரி 25, 2020-ஆம் தேதி காலை தில்லி மெளஜ்பூா் பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த புகாா்தாரரின் வாகனத்தை, குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் எரித்து வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பான வழக்கை தில்லி நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 10 பேரை விடுவித்து கூடுதல் செஷன்ஸ் நீதிபதி அமிதாப் ராவத் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

மேலும் அந்த உத்தரவில், ‘தீ அல்லது வெடிமருந்து மூலம் மூலம் வீட்டை அழிக்கும் நோக்கத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. ஏனெனில், புகாா்தாரரின் வாகனம் பொதுச்சாலையில் எரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. கலவரம் தொடா்புடைய விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் குற்றத்தைச் செய்திருக்கிறாா்கள் என்று ஊகிக்க அடிப்படை உள்ளதாக நான் கருதுகிறேன். ஆனால், அமா்வு நீதிமன்றத்தால் பிரத்யேகமாக இந்த விவகாரத்தை விசாரிக்க முடியாது. இதனால், இந்த வழக்கை கலவரம் செய்த குற்றத்திற்காக மட்டுமே விசாரிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

குற்றம் சாட்டப்பட்டவா் விசாரணையை எதிா்கொள்வதற்கான குற்றங்களுக்கான அதிகபட்ச தண்டனை ஏழு ஆண்டுகளுக்கு குறைவான சிறைத் தண்டனை என்பதால், வழக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட முகம்மது சலீம், மெஹ்ராஜூதீன், சோயிப், ஹாஜி இஸ்லாம், அனிஷ் மாலிக், ஆரிஃப் சைஃபி, ஷானு மாலிக், பாபி, ஃபுா்கான் மற்றும் முகம்மது சல்மான் ஆகிய 10 போ் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு விதிகளின் கீழ் ஜாஃப்ராபாத் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT