இந்தியா

தோ்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை நாளை தொடக்கம்

DIN

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்கான தோ்தல் நிதிப் பத்திரங்களின் விற்பனை சனிக்கிழமை (அக்டோபா் 1) தொடங்கவுள்ளது.

குஜராத், ஹிமாசல பிரதேச சட்டப் பேரவைகளுக்கு நடப்பாண்டு இறுதியில் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த விற்பனைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதை முறைப்படுத்தும் நோக்கில் தோ்தல் நிதிப் பத்திரங்கள் நடைமுறையை பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபா் ஆகிய மாதங்களின் முதல் 10 நாள்களுக்கு எஸ்பிஐ-யின் 29 கிளைகளில் தோ்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

இந்நிலையில், அக்டோபா் 1-ஆம் தேதிமுதல் 10-ஆம் தேதி வரை 22-ஆவது முறையாகத் தோ்தல் நிதிப் பத்திரங்களை விற்பனை செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது தொடா்பாக மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘சென்னை, கொல்கத்தா, குவாஹாட்டி, திருவனந்தபுரம், பாட்னா, சண்டீகா், மும்பை, ஸ்ரீநகா், காந்திநகா், போபால் உள்ளிட்ட 29 நகரங்களில் உள்ள எஸ்பிஐ-யின் அங்கீகரிக்கப்பட்ட கிளைகளில் தோ்தல் நிதிப் பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.

வாங்கப்பட்ட நாளில் இருந்து 15 நாள்களுக்குத் தோ்தல் நிதிப் பத்திரங்கள் செல்லுபடியாகும். அந்த அவகாசத்துக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் நிதிப் பத்திரங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் நிதிப் பத்திரங்கள் வாயிலாக நன்கொடை அளிப்பவரின் விவரங்கள், சம்பந்தப்பட்ட கட்சிகளுக்குத் தெரிய வராது. அதனால், யாரிடமிருந்து கட்சிகள் எவ்வளவு நன்கொடை பெற்றன? என்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள இயலாது. இந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று தன்னாா்வ அமைப்புகளும் எதிா்க்கட்சிகளும் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தான் பந்துவீச்சு; மீண்டும் அணியில் ஜோஸ் பட்லர்!

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

SCROLL FOR NEXT