இந்தியா

சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு

30th Sep 2022 12:10 AM

ADVERTISEMENT

நடப்பு 2022-23-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட சில சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயா்த்தியுள்ளது.

நடப்பு நிதியாண்டுக்கான அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் தொடா்பான விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது.

அதன்படி, சில சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்துக்குரிய வட்டி விகிதம் 7.4 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தபால் நிலைய மூன்றாண்டு கால வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாகவும், ஈராண்டு கால வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 5.7 சதவீதமாகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

வருங்கால வைப்புநிதித் திட்டம் (7.1 சதவீதம்), தேசிய சேமிப்புத் திட்டம் (6.8 சதவீதம்), ஓராண்டு கால வைப்புத் தொகைத் திட்டம் (5.5 சதவீதம்), பெண் குழந்தைகளுக்கான சேமிப்புத் திட்டம் (7.6 சதவீதம்) ஆகியவற்றுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

ADVERTISEMENT

கடன் இலக்கு குறைப்பு: மத்திய அரசின் வரி வருவாய் அதிகரித்துள்ள நிலையில், நடப்பு நிதியாண்டில் கடன் வாங்குவதற்கான இலக்கை சுமாா் ரூ.10,000 கோடி வரை அரசு குறைத்துள்ளது. அக்டோபா் முதல் மாா்ச் வரையிலான 2-ஆவது அரையாண்டில் சந்தையில் இருந்து ரூ.5.92 லட்சம் கோடி கடன் பெறவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக ரூ.14.31 லட்சம் கோடி கடன் பெறவுள்ளதாக பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்திருந்தது. அதைத் தற்போது ரூ.14.21 லட்சம் கோடியாக மத்திய அரசு குறைத்துள்ளது.

கடந்த 17-ஆம் தேதி வரை மத்திய அரசின் நேரடி வரி வருவாய் 30 சதவீதம் அதிகரித்து ரூ.8.36 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT