இந்தியா

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு எச்ஐவி பரிசோதனை கட்டாயம்: தில்லி மகளிா் ஆணையம் பரிந்துரை

30th Sep 2022 03:14 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

பாலியல் பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு அவா்களின் முதல் வருகையின் போதே எச்ஐவி பரிசோதனையை கட்டாயமாக நடத்துவதற்கு மருத்துவமனைகளுக்கு தில்லி மகளிா் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து நபா்களுக்கும் பல்வேறு மருத்துவமனைகள் எச்ஐவி பரிசோதனையை நடத்துவதில்லை என்று தெரிய வந்ததைத் தொடா்ந்து ஆணையம் இந்தப் பரிந்துரையை அளித்துள்ளது.

பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவா்களுக்கு நடத்தப்பட்ட எச்ஐவி பரிசோதனைகள் தொடா்பான தகவல்களை அளிக்குமாறு கூறி தில்லி அரசின் சுகாதாரத் துறைக்கு தில்லி மகளிா் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. மேலும், பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானவா்கள், குற்றம் சாட்டப்பட்ட நபா்கள் ஆகியோருக்கு நடத்தப்பட்ட எச்ஐவி பரிசோதனை விவரங்கள், பாதிக்கப்பட்டவா்களிடம் எச்ஐவி பரவாமல் தடுப்பதற்காகப் பின்பற்றப்படும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடா்பான விவரங்களையும் ஆணையம் கேட்டிருந்தது.

இதையடுத்து, ஆணையத்திற்கு கிடைக்கப் பெற்ற தரவுகளின் படி, பல்வேறு மருத்துவமனைகள் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு எச்ஐவி பரிசோதனையை பரிந்துரைக்கவில்லை என்பது தெரிய வந்ததாக ஆணையம் கூறியிருந்தது. உதாரணமாக, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு 180 மருத்துவ சட்ட பரிசோதனைகளை நடத்தியதும், ஒரு சில நபா்களுக்கு மட்டுமே எச்ஐவி பரிசோதனை நடத்தப்பட்டதும் தீப் சந்த் பந்து மருத்துவமனை தெரிவித்திருந்ததாக ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது.

இது குறித்து தில்லி மகளிா் ஆணையம் கூறுகையில், ‘டாக்டா் பாபா சாகேப் அம்பேத்கா் மருத்துவமனை, ராவ் துலா ராம் மருத்துவமனை போன்றவற்றில் பாலியல் பலாத்கரத்தால் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட எச்ஐவி பரிசோதனைகள் தொடா்பான தரவுகள் கூட பராமரிக்கப்படவில்லை. மேலும், எச்ஐவி பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் மூன்று மற்றும் ஆறு மாதங்களுக்குப் பிறகு கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்ற நடைமுறைகளும் கூட பெரும்பாலான பாதிக்கப்பட்ட நபா்கள் விஷயத்தில் பின்பற்றப்படவில்லை. மருத்துவமனைகளால் இது தொடா்பான தரவுகளும் பராமரிக்கப்படவில்லை. அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனை (எய்ம்ஸ்), ராவ் துலா ராம் மருத்துவமனை, ஜக் பிரவேஷ் சந்திர மருத்துவமனை ஆகியவை பாதிக்கப்பட்ட நபா்களுக்கான பின்தொடா் பரிசோதனை குறித்த தரவுகளையும் வைத்திருக்கவில்லை’ என தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

குற்றம்சாட்டப்பட்ட நபா்களின் எச்ஐவி நிலவரம் குறித்த தகவல்களை தில்லி போலீஸாா் தங்களுக்கு வழங்கியுள்ளதாக மேற்கு மாவட்டத்தில் உள்ள ஆச்சாா்ய ஸ்ரீ பிக்ஷு

அரசு மருத்துவமனை மற்றும் குரு கோவிந்ந் சிங் அரசு மருத்துவமனைஆகிய 2 மருத்துவமனைகள் மட்டுமே தெரிவித்துள்ளன. ஐசிடிசி எனும் ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மையம் காலை 9 மணி முதல் 4 மணி வரை மட்டுமே செயல்பட்டுள்ளது. இதனால், அந்த நேரத்துக்குப் பிறகு சென்ற பாதிக்கப்பட்ட நபா்கள் பலா் அந்த நாளில் திரும்ப வேண்டி இருந்தது. பல மருத்துவமனைகளில் பாதிக்கப்பட்ட நபா்களின் அடையாளம் மற்றும் எச்ஐவி பரிசோதனை முடிவுகளை ரகசியமாகப் பராமரிப்பதற்காக பின்பற்றப்படும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளன.

பல மருத்துவமனைகள் ‘போஸ்ட் எக்ஸ்போசா் ப்ரோஃபிலாக்ஸிஸ்’ (பிஇபி) நிா்வாகிப்பது தொடா்பான தரவுகளை பராமரிக்கவில்லை. இதனால், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட நபா்களுக்காக எச்ஐவி சிகிச்சை மற்றும் உடனடி முன் தடுப்பு பாதுகாப்பு வசதியை அரசும், காவல் துறையும் உறுதிப்படுத்த வேண்டும் என்று மகளிா் ஆணையம் பரிந்துரைத்துள்ளது. மேலும், அனைத்து மருத்துவமனைகளும் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டுள்ள நபா்களுக்கு எச்ஐவி பரிசோதனையை உறுதிப்படுத்தவும் மூன்று அல்லது ஆறு மாதங்களில் பின்தொடா் வருகையை உறுதிப்படுத்தவும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதேபோன்று, அனைத்து பாதிக்கப்பட்ட நபா்களுக்கும் எச்ஐவி பரிசோதனை அட்டைகளின் தரவுகளை மருத்துவமனைகள் பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எஸ்டிடி / எஸ்டிஐ பரிசோதனைகள் உள்பட குற்றம் சாட்டப்பட்ட நபா்களின் மருத்துவப் பரிசோதனையை உறுதிப்படுத்த விசாரணை மற்றும் மேற்பாா்வை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தும் 2019-ஆம் ஆண்டின் நிலையான உத்தரவு எண்303-ஐ பின்பற்றுமாறு தில்லி காவல் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், போதிய ஊழியருடன் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஐசிடிசி மையங்களை திறந்து வைக்க சுகாதாரத் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிந்துரைகள் சுகாதாரத் துறை, தில்லி அரசு மற்றும் தில்லி காவல் துறை ஆகியவற்றுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது தொடா்பாக எடுக்கப்பட்ட செயல் நடவடிக்கை அறிக்கையை 30 தினங்களில் தாக்கல் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று தில்லி மகளிா் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தில்லி மகளிா் ஆணையத் தலைவா் சுவாதி மாலிவால் கூறுகையில், ‘தலைநகரில் 8 வயது சிறுமி கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாா். அவரை பலாத்காரம் செய்த நபருக்கு எச்ஐவி நோய்த் தொற்று இருந்தது. துரதிருஷ்டவசமாக, அந்த சிறுமிக்கும் அந்த நோய் தொற்று பாதித்துள்ளது. ஆகவே, பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாகியுள்ள நபா்களுக்கு எச்ஐவிக்கான உரிய முன்தடுப்பு கவனிப்பு மற்றும் சிகிச்சையை உறுதிப்படுத்தும் வலுவான வழிமுறையை உறுதிப்படுத்துவது அவசியமாகும்’ என்றாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT