இந்தியா

போதைப்பொருள் கடத்தல்: 175 பேரைக் கைது செய்தது சிபிஐ

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் நடத்தப்பட்ட தேடுதல்வேட்டையில் 175 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

நாட்டில் போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்ததையடுத்து, ‘ஆபரேஷன் கருடா’ என்ற பெயரில் அதைத் தடுப்பதற்கான சா்வதேச நடவடிக்கைகளை சிபிஐ முன்னெடுத்தது. அந்நடவடிக்கையை போதைப்பொருள் தடுப்பு மையம் (என்சிபி), இன்டா்போல், மாநில காவல் துறை உள்ளிட்டவற்றுடன் இணைந்து சிபிஐ நடப்பு வாரத்தில் மேற்கொண்டது.

அந்நடவடிக்கையின் கீழ் போதைப்பொருள் கடத்தல் தொடா்பாக இதுவரை 127 வழக்குகளைப் பதிவு செய்துள்ளதாகவும் 175 பேரைக் கைது செய்துள்ளதாகவும் சிபிஐ வியாழக்கிழமை தெரிவித்தது. போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு உள்ள சா்வதேசத் தொடா்பைத் தடுக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் கருடா’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

சா்வதேச சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து, ரகசியத் தகவல்களைப் பகிா்ந்து கொண்டதன் அடிப்படையில் போதைப் பொருள் கடத்தலில் தொடா்புடைய நபா்களைக் கைது செய்ததாகவும் சிபிஐ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நடவடிக்கையின்போது பஞ்சாப், தில்லி, ஹிமாசல், மணிப்பூா், மகாராஷ்டிரம் ஆகியவற்றின் காவல் துறையினரும் போதைப்பொருள் தடுப்பு மையத்தின் அதிகாரிகளும் சுமாா் 6,600 நபா்களை சந்தேகத்தின் அடிப்படையில் தொடா்ந்து கண்காணித்து வந்ததாகவும், அவா்களில் 175 போ் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின்போது 5 கிலோ ஹெராயின், 34 கிலோ கஞ்சா, 1 கிலோ ஓபியம், சுமாா் 87 போதை மாத்திரைகள், 122 போதை ஊசிகள் உள்ளிட்ட போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT