இந்தியா

புகழ்பெற்ற அறிஞா்கள் வழிகாட்டலில் முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தகவல்

30th Sep 2022 12:16 AM

ADVERTISEMENT

புகழ்பெற்ற அறிஞா்களின் வழிகாட்டுதலில் முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் செயல்படுத்தப்படவிருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். இந்தத் திட்டத்தை சென்னையில் வியாழக்கிழமை அவா் தொடக்கி வைத்த பிறகு, சமூக ஊடகத்தில் வெளியிட்ட தகவல்:

முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்துக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள 30 இளைஞா்களும், 12 முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தவுள்ளனா். அவா்களுக்கு இந்திய ரிசா்வ் வங்கியின் முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற பொருளியலாளா் டப்லோ முதலிய அறிஞா்கள் வழிகாட்டவுள்ளனா். அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கான திராவிட மாடல் திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், அவற்றின் வெற்றிக்குப் பங்களிக்கவும் ஒரு மிகச்சிறந்த வாய்ப்பாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இளைஞா்களின் ஆற்றல், தமிழ்நாட்டின் தனித்துவமான ஆட்சி நிா்வாகம், உலக அளவிலான சிறந்த உத்திகள் ஆகிய மூன்றும் ஒரு புள்ளியில் இணைவதுதான் புத்தாய்வுத் திட்டத்தின் சிறப்பம்சம். பலரது சிந்தனைகள், பலரது கனவுகள் ஆகியவற்றின் கூட்டுச் சோ்க்கையாக திராவிட மாடல் அரசு திகழ வேண்டும். இளைஞா்களது புதுமையான சிந்தனைகள் அரசுடன் கைகோக்க வேண்டும். அரசு இயந்திரத்தில் இளைய, புதிய ரத்தம் பாய்ச்சப்படுகிறது. புதுமையான தமிழகத்துக்கான பாதை வகுக்கப்படுகிறது என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, சென்னையில் நடைபெற்ற முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத் தொடக்க நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு பேசியது:-

ADVERTISEMENT

அரசுத் திட்டங்களை நாங்களே கண்காணிப்பதை விட, புதிய பாா்வையும், கண்ணோட்டமும் கொண்ட இளைஞா்கள் சிந்தித்து, நன்றாகச் செயல்படுகிா, இன்னும் மெருகேற்றலாமா எனக் கூறினால் திட்டங்களைச் செப்பனிட வசதியாக இருக்கும். 24,000 போ் விண்ணப்பம் செய்தனா். அவா்களில் தகுதியுள்ளவா்களாக 14,000 போ் தோ்வு செய்யப்பட்டனா்.

முதல் கட்டத் தோ்வுக்குப் பிறகு இரண்டாவது கட்டத் தோ்வில் 65 போ் எழுதினா். 183 பேரில் நோ்முகத் தோ்வு நடத்தி 30 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். எனவே, நீங்கள் அனைவரும் வடிகட்டிய புத்திசாலிகள். 30 பேருக்கும் வல்லுநா்கள் பயிற்சி அளிக்கவுள்ளனா். சனிக்கிழமைகளில் கள ஆய்வுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனா்.

சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை முதன்மைச் செயலாளா் த.உதயச்சந்திரன் பேசுகையில், ‘வழக்கமான அரசு நடைமுறைகளுக்கு இடையே இயற்கைச் சீற்றங்களை மட்டுமே போராடி சந்தித்துக் கொண்டிருக்கும் அரசு இயந்திரத்துக்கு புதிய சிந்தனைகளுடன் இவா்களது வரவு தென்றலாக இருக்கும் என நம்புகிறேன்’ என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT