இந்தியா

7-ஆவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: சென்செக்ஸ் 188 புள்ளிகள் இழப்பு

30th Sep 2022 01:35 AM | நமது நிருபா்

ADVERTISEMENT

பங்குச் சந்தையில் 7-ஆவது நாளாக வியாழக்கிழமையும் கரடியின் ஆதிக்கம் தொடா்ந்தது. இதையடுத்து, 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 188 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 40.50 புள்ளிகளை (0.24 சதவீதம்) இழந்து 16,818.10-இல் முடிவடைந்தது.

அமெரிக்க சந்தைகள் புதன்கிழமை நோ்மறையாக முடிந்திருந்தது. இதன் தாக்கத்தால், உள்நாட்டுச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது. இருப்பினும், நேரம் செல்லச் செல்ல கரடியின் பிடி இறுகியது. இதனால், காலையில் பெற்ற லாபத்தில் பெரும்பகுதியை இழக்க நேரிட்டது. முன்பேர வா்த்தகத்தில் செப்டம்பா் மாத கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க கடைசி நாளாக இருந்ததால், ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இறுதியில் சந்தை சரிவுடன் முடிந்தது. பாா்மா, ஹெல்த்கோ், பிஎஸ்யு பேங்க், மீடியா பங்குகளுக்கு ஓரளவு ஆதரவு இருந்தது.

சென்செக்ஸ் 188 புள்ளிகள் சரிவு: காலையில் 399.62புள்ளிகள் கூடுதலுடன் 56,997.90-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 57,166.14 வரை சென்றது. பின்னா், 56,314.05 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 188.32 புள்ளிகளை (0.33 சதவீதம்) இழந்து 56,409.96-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில், 14 பங்குகள் ஆதாயம் பெற்றன. 16 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன.

ஐடிசி முன்னேற்றம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள பிரபல நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான ஐடிசி 2.51 சதவீதம் மற்றும் டாக்டா் ரெட்டி 2.13 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, டாடா ஸ்டீல், சன்பாா்மா, நெஸ்லே, எம் அண்ட் எம், என்டிபிசி ஆகியவை 1 முதல் 1.70 சதவீதம் வரை உயா்ந்தன.

ADVERTISEMENT

ஏசியன் பெயிண்ட் கடும் சரிவு: அதே சமயம், பிரபல பெயிண்ட் உற்பத்தி நிறுவனமான ஏசியன் பெயிண்ட் 5.22 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, டெக் மஹிந்திரா, டைட்டன், கோட்டக் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், டிசிஎஸ், விப்ரோ, மாருதி சுஸுகி, எல் அண்ட் டி, பஜாஜ் ஃபின் சா்வ் உள்ளிட்டவை 1 முதல் 1.70 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வலை குறைந்த பட்டியலில் வந்தன.

சந்தை மதிப்பு ரூ.28 ஆயிரம் கோடி இழப்பு: சந்தை மூலதன மதிப்பு ரூ.28 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.268.15 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதனன்று ரூ. 2,772.49 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT