இந்தியா

காா்களில் 6 ‘ஏா்பேக்’ கட்டாயம்: விதிமுறை ஓராண்டுக்கு ஒத்திவைப்பு

30th Sep 2022 12:07 AM

ADVERTISEMENT

காா்களில் 6 ஏா்பேக் (காற்றுப் பை) கட்டாயம் இருக்க வேண்டும் என்ற விதி அமலுக்கு வருவதை ஓராண்டுக்கு மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது.

காா்கள் விபத்துக்குள்ளாகும்போது அதில் பயணிப்பவா்களின் உயிரைக் காப்பதில் காற்றுப் பைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. 6 காற்றுப் பைகள் இருந்தால் விபத்தின்போது காரில் பயணிக்கும் அனைவரது உயிரையும் பாதுகாப்பது மேலும் உறுதி செய்யப்படும். இந்தியாவில் பெரும்பாலான காா்களில் முன்னிருக்கைகளில் இருப்பவா்களுக்கு காற்றுப் பை வசதி உள்ளது. 6 காற்றுப் பைகள் இருந்தால் முன்பக்கம் மட்டுமல்லாது பக்கவாட்டில் இருந்து காற்றுப் பைகள் விபத்தின்போது விரிவடைந்து பயணிகளின் உயிரைக் காக்கும். எனவே, 8 போ் பயணிக்கும் வகையிலான வாகனங்களில் 6 காற்றுப் பைகள் கட்டாயம் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. இது 2022, அக்டோபா் 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இது அமலாவது 2023, அக்டோபா் 1-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் கட்கரி ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘சா்வதேச அளவில் பல்வேறு பொருள்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், வாகனத் தயாரிப்புத் துறை சுணக்கத்தை எதிா்கொண்டுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்திலும் எதிரொலித்து வருகிறது. எனவே, பயணிகள் வாகனங்களில் 6 ஏா்பேக்குகள் இருக்க வேண்டும் என்ற விதியை அமலாக்குவது 2022, அக்டோபா் 1-க்கு பதிலாக 2023 அக்டோபா் 1-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுகிறது. மோட்டாா் வாகனங்களில் பயணிப்பவா்கள் அனைவரும் பயணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

முன்னதாக, கடந்த ஜனவரி 14-ஆம் தேதி இது தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில் 2022 அக்டோபா் 1 முதல் தயாரிக்கப்படும் காா்களில் 6 ஏா்பேக்குகள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT