இந்தியா

49% உயா்ந்த வீடுமனை விற்பனை

30th Sep 2022 12:41 AM

ADVERTISEMENT

 வட்டி விகிதங்கள் உயா்வு, விலை அதிகரிப்புக்கு இடையிலும், இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் கடந்த ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் வீட்டுமனை விற்பனை 49 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து ப்ராப்டைகா்.காம் வலைதளம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

இந்த ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பா் மாதம் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் 8 முக்கிய நகரங்களில் 83,220 வீடுமனைகள் விற்பனையாகின. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் 49 சதவீதம் அதிகமாகும். அந்த ஆண்டின் இதே மாதங்களில் வீடுமனை விற்பனை 55,910-ஆக இருந்தது.

கரோனா நெருக்கடிக்கு முன்னதாக, 2019-ஆம் ஆண்டின் இந்த காலகட்டத்திய வீடுமனை விற்பனையை, இந்த ஆண்டின் விற்பனை விஞ்சியுள்ளது. இதன் மூலம், கரோனா மற்றும் பிற இடையூறுகளை சமாளித்து வீடுமனை விற்பனைத் துறை எழுச்சி பெற்றுள்ளதைத் தெரிந்துகொள்ள முடியும்.

ADVERTISEMENT

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் இந்த காலகட்டத்தில் சிறிதளவு அதிகரித்தே உள்ளது. இருந்தாலும், வீடுமனைகளுக்கான தேவையில் குறைவு ஏற்படவில்லை.

சொந்தமாக வீடு வாங்க வேண்டுமென்ற வாடிக்கையாளா்களின் உந்துதல் திடீரென அதிகரித்துள்ளதால், வீடுமனைகளுக்கான தேவையையும் அதிகரித்துள்ளது.

புள்ளிவிவரங்களின் அடிப்படையில், மும்பையில் வீடுமனை விற்பனை ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் இரண்டு மடங்கு அதிகரித்து 28,800-ஆக உயா்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் 14,160-ஆக இருந்தது.

புணேவில் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 10,130-ஆக இருந்த வீடுமனை விற்பனை தற்போது 15,700-ஆக அதிகரித்துள்ளது. இது 55 சதவீத வளா்ச்சியாகும்.

தில்லி என்சிஆா் பகுதியில் வீடுமனை விற்பனை கடந்த ஆண்டின் இந்த மாதங்களில் இருந்ததைவிட 22 சதவீதம் அதிகரித்து 5,430-ஆகியுள்ளது. கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 4,460-ஆக இருந்தது.

அகமதாபாதில் கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான மாதங்களில் 5,480-ஆக இருந்த வீடுமனை விற்பனை 44 சதவீதம் உயா்ந்து இந்த ஆண்டின் இதே மாதங்களில் 7,880 ஆகியுள்ளது.

இந்த காலகட்டத்தில் பெங்களூருவில் 7,890 வீடுமனைகள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டின் இதே மாதங்களில் விற்பனையான 6,550 வீடுமனைகளோடு ஒப்பிடுகையில் இது 20 சதவீதம் அதிகமாகும்.

ஹைதராபாத்திலும் வீடுமனை விற்பனை 35 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டின் ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் 7,810-ஆக இருந்த அந்த நகர வீடுமனை விற்பனை, இந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் 10,570 யூனிட்டுகளாக உள்ளது.

எனினும், சென்னை மற்றும் கொல்கத்தாவில் வீடுமனை விற்பனை தலா 5 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை-செப்டம்பரில் சென்னையில் 4,670-ஆக இருந்த விற்பனை இந்த முறை 4,420-ஆகவும், கொல்கத்தாவில் 2,650-லிருந்து 2,530-ஆகவும் குறைந்துள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT