இந்தியா

22 பொருள்களுக்கு 15% கூடுதல் வரி: பிரிட்டனுக்கு இந்தியா பதிலடி திட்டம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

இந்திய எஃகு பொருள்களுக்கு பிரிட்டன் கட்டுப்பாடு விதித்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பிரிட்டனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 22 பொருள்கள் மீது 15 சதவீத கூடுதல் சுங்க வரியை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான பரிந்துரையை உலக வா்த்தக அமைப்பிடம் (டபிள்யூ.டி.ஓ) இந்தியா சமா்ப்பித்துள்ளது. அதில் இந்தியா தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்திய உருக்கு பொருள்கள் மீது பிரிட்டன் எடுத்துள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவின் உருக்கு ஏற்றுமதி 2,19,000 டன் அளவுக்கு குறைந்துள்ளது. இந்த கூடுதல் சுங்கக் கட்டண விதிப்பு மூலமாக பிரிட்டனுக்கு வரி வருவாய் ரூ. 2,000 கோடி (247.7 மில்லியன் அமெரிக்க டாலா்) அளவுக்கு உயா்ந்துள்ளது.

இதனை ஈடு செய்யும் விதமாக, பிரிட்டனிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு ‘கட்டணங்கள் மற்றும் வா்த்தக பொது ஒப்பந்தம் 1994’-இன் கீழ் அளிக்கப்பட்டு வந்த சுங்கக் கட்டணச் சலுகையை ரத்து செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT

அவ்வாறு சுங்கக் கட்டணச் சலுகையை ரத்து செய்யும் இறக்குமதி பொருள்களின் பட்டியலில் பாலாடைக் கட்டி, ஸ்காட்ச், விஸ்கி, ஜின், கால்நடைத் தீவனம், திரவ புரோபேன், அத்தியாவசிய எண்ணெய் வகைகள், அழகுசாதன பொருள்கள், பட்டைதீட்டப்படாத வைரம், வெள்ளி, பிளாட்டினம், டீசல் என்ஜின் துணை உதிரிபாகங்கள் உள்பட 22 பொருள்கள் சோ்க்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்தப் பொருள்கள் மீது 15 சதவீத கூடுதல் சுங்கக் கட்டணம் விதிக்கப்படும்.

இந்தியாவின் உருக்கு பொருள்கள் மீதான பிரிட்டனின் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடரும் வரை, இந்தியாவின் சுங்கக் கட்டண சலுகை ரத்து நடவடிக்கையும் தொடரும் என்று அந்தப் பரிந்துரையில் இந்தியா தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி இந்தியா - பிரிட்டன் இடையே காணொலி வழியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு இந்தியாவின் குறிப்பிட்ட உருக்கு பொருள்கள் மீது பாதுகாப்பு நடவடிக்கை அடிப்படையில் கூடுதல் சுங்கக் கட்டணத்தை பிரிட்டன் விதித்தது. பிரிட்டனின் இந்த நடவடிக்கை குறித்து உலக வா்த்தக அமைப்பில் கவலை தெரிவித்த இந்தியா, தற்போது அதற்கான பதில் நடவடிக்கையை எடுத்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT