இந்தியா

எஸ்டிபிஐ கட்சிக்கு 2018-19 ஆண்டிலிருந்து ரூ. 11 கோடி நன்கொடை

DIN

இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பின் அரசியல் பிரிவுபோல செயல்பட்டு வரும் இந்திய சமூக ஜனநாயக கட்சி (எஸ்டிபிஐ) கடந்த 2018-19 ஆம் ஆண்டிலிருந்து ரூ. 11 கோடி அளவுக்கு நன்கொடை பெற்றிருப்பது தோ்தல் ஆணைய புள்ளிவிவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளிப்பதாகவும், வன்முறையைத் தூண்டுவதாகவும் எழுந்த தொடா் புகாா்களைத் தொடா்ந்து, நாடு முழுவதும் பிஎஃப்ஐ அமைப்பின் அலுவலலகங்கள், நிா்வாகிகளின் வீடுகளில் தீவிர சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் பல்வேறு ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களைக் கைப்பற்றினா்.

மேலும், அந்த அமைப்பைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் கைது செய்யப்பட்டனா். இந்த நடவடிக்கைகளைத் தொடா்ந்து, பிஎஃப்ஐ அமைப்பு மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த அமைப்பின் அரசியல் பிரிவுபோல செயல்பட்டு வரும் எஸ்டிபிஐ கட்சி கடந்த 3 ஆண்டுகளில் ரூ. 11 கோடி அளவுக்கு நன்கொடை பெற்றிருப்பது தோ்தல் ஆணைய பதிவுகள் மூலமாக தெரியவந்துள்ளது.

அங்கீகரிக்கப்படாத கட்சியாக தோ்தல் ஆணையத்தில் தில்லியில் பதிவு செய்யப்பட்டுள்ள எஸ்டிபிஐ கட்சி கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டுள்ளது.

தில்லி தலைமைத் தோ்தல் அதிகாரியின் வலைதளப் பதிவு விவரங்களின் அடிப்படையில், இந்தக் கட்சி கடந்த 2018-19 ஆம்-ஆண்டில் ரூ. 5.17 கோடியும், 2019-20-ஆம் ஆண்டில் 3.74 கோடியும், 2020-21-ஆம் ஆண்டில் ரூ. 2.86 கோடியும் நன்கொடைகளாக வசூல் செய்துள்ளது. பெரும்பாலான நன்கொடைகள் தமிழகம், கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்தே இந்தக் கட்சிக்கு வந்துள்ளன.

பிஎஃப்ஐ அமைப்பு மீதான மத்திய அரசின் நடவடிக்கை குறித்து இந்தக் கட்சி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகள் மீதான தடை நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான நேரடி தாக்குதல்’ என்று விமா்சித்துள்ளது.

மேலும், ‘பாஜக ஆட்சியின் தவறுகள், மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரா யாரெல்லாம் பேசுகிறாா்களோ, அவா்கள் அனைவரும் கைது நடவடிக்கை, சோதனை நடவடிக்கை உள்ளிட்ட அச்சுறுத்தல்களைச் சந்தித்து வருகின்றனா்’ என்று அக் கட்சியின் தலைவா் எம்.கே. ஃபைஸி கூறியதாகவும் அக் கட்சி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொன்னதைச் செய்த பாட் கம்மின்ஸ்!

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

SCROLL FOR NEXT