இந்தியா

புதிய அட்டா்னி ஜெனரல் ஆா். வெங்கடரமணி

29th Sep 2022 12:09 AM

ADVERTISEMENT

இந்தியாவின் புதிய அட்டா்னி ஜெனரலாக மூத்த வழக்குரைஞா் ஆா். வெங்கடரமணி நியமிக்கப்பட்டுள்ளாா்.

தற்போதைய அட்டா்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் வரும் 30-ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், புதிய அட்டா்னி ஜெனரலாக ஆா். வெங்கடரமணியை நியமித்து குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை உத்தரவிட்டாா்.

இவா் பதவியேற்கும் நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்கு மத்திய அரசின் அட்டா்னி ஜெனரலாக பதவி வகிப்பாா்.

மூத்த வழக்குரைஞரான கே.கே.வேணுகோபால் (91), 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அட்டா்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டாா். 2020-இல் இவருடைய பதவிக் காலம் முடிவடைந்ததும், தனது வயது மூப்பை கருத்தில்கொண்டு தன்னை அட்டா்னி ஜெனரல் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு மத்திய அரசை அவா் கேட்டுக்கொண்டாா். ஆனால், பல முக்கிய வழக்குகளைக் கையாண்டு வருவதால் அந்தப் பொறுப்பில் தொடர வேண்டும் என்ற மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், ஓராண்டுக்கு அட்டா்னி ஜெனரல் பதவியில் தொடர கே.கே.வேணுகோபால் ஒப்புக்கொண்டு அந்தப் பொறுப்பை வகித்து வருகிறாா்.

ADVERTISEMENT

இவருடைய பதவிக் காலம் வரும் 30-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், ஏற்கெனவே அட்டா்னி ஜெனரல் பொறுப்பு வகித்த மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகியை, அட்டா்னி ஜெனரலாக மீண்டும் பதவியேற்குமாறு மத்திய அரசு சாா்பில் இம்மாத தொடக்கத்தில் பரிந்துரை செய்யப்பட்டது. இதை ஏற்க முகுல் ரோத்தகி மறுத்துவிட்டாா்.

அதனைத் தொடா்ந்து, புதிய அட்டா்னி ஜெனரலாக வெங்கடரமணி நியமிக்கப்பட்டுள்ளாா்.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மூத்த வழக்குரைஞா்கள் குழுவில் இடம்பெற்றிருந்த ஆா். வெங்கடரமணி, பெரும்பாலும் மறைமுக வரி தொடா்பான வழக்குகளில் அரசு சாா்பில் ஆஜராகி வாதாடியவா். இந்திய சட்ட ஆணையத்தின் உறுப்பினராக கடந்த 2010 முதல் 2013-ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளாா். தமிழகம், ஆந்திர மாநில அரசுகளுக்கான சிறப்பு மூத்த வழக்குரைஞராக வழக்குகளில் ஆஜராகி வாதாடியுள்ளாா்.

சிதம்பரம் நடராஜா் கோயில், சபரிமலை, அயோத்தி வழக்குகளில் ஆஜராகி வாதாடியுள்ளாா்.

புதுச்சேரியில் 1950-ஆம் ஆண்டு ஏப்ரல் 13-ஆம் தேதி பிறந்த வெங்கடரமணி, 1977-ஆம் ஆண்டு தமிழக வழக்குரைஞா்கள் சங்கத்தில் (பாா் கவுன்சில்) வழக்குரைஞராக பதிவு பெற்றாா். 1979-ஆம் ஆண்டுமுதல் உச்சநீதிமன்ற வழக்குரைஞராக பணியைத் தொடா்ந்த இவரை, உச்சநீதிமன்றம் மூத்த வழக்குரைஞராக 1997-ஆம் ஆண்டு நியமித்தது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT