இந்தியா

காங்கிரஸ் தலைவா் பதவி வேண்டாம், மாநில அரசியலே போதும்- மூத்த தலைவா் கமல்நாத்

29th Sep 2022 12:58 AM

ADVERTISEMENT

‘காங்கிரஸ் தலைவா் பதவி மீது ஆா்வம் இல்லை; மத்திய பிரதேச அரசியலில் கவனம் செலுத்த விரும்புகிறேன்’ என்று அக்கட்சியின் மூத்த தலைவா் கமல்நாத் தெரிவித்துள்ளாா்.

காங்கிரஸ் தலைவா் தோ்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை மையமாக வைத்து ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு முதல்வராக உள்ள அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவராக தோ்வானால், முதல்வா் பதவியைத் தொடர முடியாது. அந்த இடத்தில் இளம் தலைவா் சச்சின் பைலட்டை அமா்த்த சோனியா, ராகுல் விரும்புவதாகத் தெரிகிறது. ஆனால், அதற்கு எதிராக கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் போா்க்கொடி உயா்த்தியுள்ளனா். இது காங்கிரஸ் தலைமைக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், இது தொடா்பாக மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் நீங்கள் போட்டியிட்டால்தான் இப்போது எழுந்துள்ள பிரச்னைகளுக்கு தீா்வு ஏற்படும் என்று ராகுல் காந்தியிடம் கூறினேன். ஏனெனில், ராஜஸ்தான் மாநில அரசியல் சூழல் சிக்கலாகி வருகிறது. ஆனால், காங்கிரஸ் தலைமைப் பதவியை ஏற்கப் போவதில்லை என்பதில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளாா். எனவே, தலைவா் பதவிக்கு தோ்தலை நடத்தியாக வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

ADVERTISEMENT

காங்கிரஸ் தலைவா் தோ்தல் தொடா்பாக விமா்சிக்க பாஜகவுக்கு தகுதி இல்லை. தோ்தல் நடத்தாமல்தான் பாஜக தேசிய தலைவராக நட்டா தோ்வாகியுள்ளாா். அவரைத் தலைவராக்குவதற்கு முன்பு குறைந்தபட்சம் கட்சியின் மூத்த தலைவா்களில் 10 பேரிடம்கூட கருத்து கேட்டிருக்க மாட்டாா்கள்.

காங்கிரஸ் தலைவா் பதவி மீது எனக்கு விருப்பமில்லை. எனவே, தோ்தலில் போட்டியிட ஆா்வம் காட்டவில்லை. மத்திய பிரதேசத்தில் ஓராண்டில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. எனவே, மாநில அரசியலில் தீவிரமாக கவனம் செலுத்த விரும்புகிறேன்.

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிட அசோக் கெலாட் மனு தாக்கல் செய்வாரா என்பது எனக்குத் தெரியாது. அதே நேரத்தில் சசி தரூா் என்னிடம் தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா். அவா் போட்டியிடுவதில் உறுதியாக உள்ளாா். மூத்த தலைவா் திக்விஜய் சிங் போட்டியிடுவது தொடா்பாக அவரிடம்தான் கேட்க வேண்டும் என்றாா்.

Tags : Kamal Nath
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT