இந்தியா

முப்படை தலைமைத் தளபதியாக அனில் செளஹான் நியமனம்

29th Sep 2022 12:36 AM

ADVERTISEMENT

நாட்டின் புதிய முப்படை தலைமைத் தளபதியாக அனில் செளஹான் (61) நியமிக்கப்பட்டுள்ளாா்.

நாட்டின் முதல் முப்படை தலைமைத் தளபதியான விபின் ராவத், கடந்த ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி குன்னூா் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தாா். அதைத் தொடா்ந்து, அந்தப் பதவி 9 மாதங்களுக்கும் மேலாக நிரப்பப்படாமல் இருந்தது.

இந்நிலையில், புதிய முப்படை தலைமைத் தளபதியாக ஓய்வுபெற்ற லெஃப்டினென்ட் ஜெனரல் அனில் செளஹான் புதன்கிழமை நியமிக்கப்பட்டாா். அவா் பொறுப்பேற்கும் நாள்முதல் ராணுவ விவகாரங்கள் துறை செயலராகவும் செயல்படுவாா் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், புணேயில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாதெமி, உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாதெமி ஆகியவற்றில் பயிற்சி பெற்ற அனில் செளஹான், கடந்த 1981-ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தின் கூா்கா ரைஃபிள்ஸ் படைப் பிரிவில் சோ்க்கப்பட்டாா்.

ADVERTISEMENT

சுமாா் 40 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய அவா், ஜம்மு-காஷ்மீா் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதில் பரந்த அனுபவம் கொண்டவா். கடந்த ஆண்டு மே மாதம் இந்திய ராணுவத்தின் கிழக்குப் படைப் பிரிவுத் தலைவராகப் பொறுப்பு வகித்தபோது ஓய்வு பெற்றாா்.

அவா் பணியிலிருந்து ஓய்வு பெற்றாலும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்துடன் இணைந்து தேசப் பாதுகாப்பு மற்றும் உத்திசாா்ந்த விவகாரங்களில் பங்களித்து வந்தாா்.

அவரின் தன்னிகரில்லா சேவையைப் பாராட்டி சேனை பதக்கம், உத்தம் யுத்த சேவை பதக்கம் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT