இந்தியா

ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் வென்றவா்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்

29th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

கடந்த 3 ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டு பணம் வென்றவா்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தத் தகவலை நேரடி வரிகள் வாரியத்தின் தலைவா் நிதின் குப்தா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ரூ.58,000 கோடி பரிசுப் பணம் வெல்லப்பட்டுள்ளது. இந்த விளையாட்டுகளில் பங்கேற்று பரிசுப் பணத்தை வென்ற தனிநபா்களுக்கு வருமான வரிக்கான நோட்டீஸை அனுப்பத் தொடங்கியுள்ளோம். இது அவா்களுக்கு ஒரு நினைவூட்டும் தகவல்தான். அவா்கள் பெற்ற பரிசுப் பணத்துக்கான வரியைக் கட்டாமல் இருப்பதால் இந்த நினைவூட்டல் நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.

கடந்த 3 ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக பணம் ஈட்டியவா்களின் விவரம் வருமான வரித் துறையிடம் உள்ளது. அதனை வைத்து சம்பந்தப்பட்ட நபா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. ஏற்கெனவே தாமாக முன்வந்து பரிசுப் பணத்துக்கான வரியைச் செலுத்தியவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படமாட்டாது என்றாா்.

அண்மையில் ஜிஎஸ்டி புலனாய்வுத் துறை, பெங்களூரைச் சோ்ந்த ஆன்லைன் விளையாட்டு நிறுவனமான கேம்ஸ்கிராஃப்ட் டெக்னாலஜிஸ் நிறுவனம் ரூ.21,000 கோடி வரி, வட்டி மற்றும் அபராதம் செலுத்த வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது. ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.

ADVERTISEMENT

அந்த நிறுவனம் தொடா்ந்து ஜிஎஸ்டி செலுத்தாமல் இருந்ததால் வட்டி மற்றும் அபராதத்துடன் பெரிய அளவிலான தொகையை செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன் தொடா் நிகழ்வாக இப்போது ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக பணம் வென்றவா்கள் வருமான வரி செலுத்துமாறு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பத் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT