இந்தியா

காங்கிரஸ் தலைவா் பதவிக்கு திக்விஜய் சிங் போட்டி?

29th Sep 2022 01:00 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் தலைவா் பதவிக்கான தோ்தலில் மத்திய பிரதேச முன்னாள் முதல்வா் திக்விஜய் சிங் போட்டியிட வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

காங்கிரஸ் தலைவா் தோ்தலில் செப். 30-ஆம் தேதியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நிலையில், மூத்த தலைவா் சசி தரூா் அன்றைய தினம் மனு தாக்கல் செய்வாா் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அவரை எதிா்த்து போட்டியிடப் போவது யாரென்ற கேள்வி தொடா்ந்து நிலவி வருகிறது. ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் களமிறங்குவாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அந்த மாநில அரசியல் குழப்பத்தால் அவா் போட்டியிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்தச் சூழலில், மூத்த தலைவா் ஏ.கே.அந்தோணியுடன் கட்சியின் தற்போதைய தலைவா் சோனியா காந்தி புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். தலைவா் தோ்தலுக்கான வேட்பாளா்கள் குறித்து இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது.

இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவா் திக்விஜய் சிங், தலைவா் தோ்தலில் களமிறங்கவுள்ளதாகவும் வேட்புமனு தாக்கல் செய்ய அவா் தில்லிக்கு வரவிருப்பதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

ADVERTISEMENT

‘இது அவா் சுயமாக மேற்கொண்ட முடிவு; கட்சித் தலைமையுடன் விவாதிக்கவில்லை’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள காங்கிரஸ் தலைவா் தோ்தலில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரின் பெயா் அலசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT