இந்தியா

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: நாளை சசி தரூர் வேட்புமனு தாக்கல்

29th Sep 2022 03:04 AM

ADVERTISEMENT

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் கேரள எம்.பி. சசிதரூர், வெள்ளிக்கிழமை (செப். 30) தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
 இதையொட்டி, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரபல உருது பாடல் ஒன்றை புதன்கிழமை பதிவேற்றம் செய்துள்ளார்.
 இந்த வாரத் தொடக்கத்தில் சசிதரூர் கூறுகையில், "அகில இந்திய காங்கிரல் கமிட்டியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட நாட்டின் அனைத்துத் தரப்பில் இருந்தும் கட்சித் தொண்டர்கள் எனக்கு ஆதரவளித்துள்ளனர். வரும் 30-ஆம் தேதி காலை 11 மணியளவில் வேட்புமனுவைத் தாக்கல் செய்யவுள்ளேன்' எனத் தெரிவித்திருந்தார்.
 இந்நிலையில், அவர் புதன்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில், பிரபல உருது கவிஞர் மஜ்ரூ சுல்தான்புரியின் பாடல் வரிகளைப் பதிவேற்றம் செய்துள்ளார். "நான் எனது பயணத்தைத் தொடங்கினேன். தற்போது மக்கள் என்னுடன் இணைந்துள்ளனர் என பாடல் வரி சொல்கிறது.
 இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: எனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யும்போது நான் மகிழ்ச்சியுடன் இருப்பதையும் எனக்கு கட்சித் தொண்டர்களின் ஆதரவையும் நீங்கள் காண்பீர்கள். அனைத்து மாநிலங்களிலும் இருந்தும் பெருவாரியான கட்சித் தொண்டர்களின் ஆதரவு எனக்கும் கிடைக்கும்பட்சத்தில் இந்தப் போட்டியில் நானும் முக்கிய இடம் பிடிப்பேன். இந்தப் போட்டியில் கலந்துகொள்ளுமாறு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கட்சித் தொண்டர்கள் என்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT