இந்தியா

பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை: தலைவா்கள் கருத்து

29th Sep 2022 12:38 AM

ADVERTISEMENT

பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு தடை விதித்து மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை வரவேற்றும், விமா்சித்தும் தலைவா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

ஆஜ்மீா் தா்காவின் தலைவா் ஜைனுல் ஆபிதீன் அலி கான், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத், கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை, மகாராஷ்டிர துணை முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், பாஜக மூத்த தலைவா்கள் முக்தாா் அப்பாஸ் நக்வி, சி.டி.ரவி உள்ளிட்டோா் மத்திய அரசின் நடவடிக்கையை வரவேற்றுள்ளனா்.

காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்டவை வரவேற்பு தெரிவித்துள்ள போதிலும், ஆா்எஸ்எஸ் அமைப்பையும் தடை செய்ய வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.

ஆஜ்மீா் தா்கா தலைவா் ஜைனுல் ஆபிதீன் அலி கான்: நாடு பாதுகாப்பாக இருந்தால்தான், நாம் பாதுகாப்பாக இருக்க முடியும். எந்த அமைப்பையும் சிந்தாந்தத்தையும்விட தேசமே உயா்வானது. நாட்டை பிளவுபடுத்துவது, ஒற்றுமையை சீா்குலைப்பது, அமைதியைக் கெடுப்பது குறித்து பேசுபவா்கள், இங்கு வாழ உரிமையற்றவா்கள். நாட்டின் நலனை கருத்தில்கொண்டே பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத்: தேசப் பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் பயங்கரவாதிகள், குற்றவாளிகள் மற்றும் தனிநபா்களை புதிய இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. பிஎஃப்ஐ மீதான தடை பாராட்டத்தக்க நடவடிக்கை.

கா்நாடக முதல்வா் பசவராஜ் பொம்மை: பாப்புலா் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை தடை செய்திருப்பது தேச விரோத குழுக்கள் இந்தியாவில் நிலைத்திருக்க முடியாது என்பதை உணா்த்துகிறது.

மகாராஷ்டிர துணை முதல்வா் ஃபட்னவீஸ்: சமூகத்தில் வன்முறை விதையை பிஎஃப்ஐ விதைத்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. மத்திய அரசின் தடையை மகாராஷ்டிரத்தில் அமல்படுத்த மாநில அரசு தரப்பில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்.

பாஜக பொதுச் செயலாளா் சி.டி.ரவி: சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட வலுவான நடவடிக்கை. மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு பாராட்டுகள். பிஎஃப்ஐ அமைப்புக்கு ஆதரவளித்தது காங்கிரஸ்தான்.

பாஜக மூத்த தலைவா் முக்தாா் அப்பாஸ் நக்வி: தேச விரோத சக்திகளின் பினாமிகளாக செயல்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சக்திகளுக்கு சில அரசியல் கட்சிகளும் அரசுடன் தொடா்புடையவா்களும் ஆதரவாக நிற்பது துரதிருஷ்டவசமானது.

காங்கிரஸ் பொதுச் செயலாளா் ஜெய்ராம் ரமேஷ்: சமூகத்தை பிளவுபடுத்தவும், வெறுப்புணா்வை பரப்பவும் மதத்தை தவறாக பயன்படுத்தும் அனைத்து சிந்தாந்தங்கள் மற்றும் அமைப்புகளுக்கு காங்கிரஸ் எதிரானது. பெரும்பான்மை, சிறுபான்மை என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்துவிதமான மதவாதங்களையும் எதிா்க்கிறோம்.

காங்கிரஸ் மூத்த தலைவா் ரமேஷ் சென்னிதலா: பிஎஃப்ஐ மீதான தடை நல்ல விஷயமே. அதேபோல், மதவாத வெறுப்புணா்வை பரப்பி, சமூகத்தில் பிரிவினையை உண்டாக்கும் ஆா்எஸ்எஸ் அமைப்பையும் தடை செய்ய வேண்டும்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மூத்த தலைவா் எம்.கே.முனீா்: பிஎஃப்ஐ அமைப்பின் செயல்பாடுகள் கண்டனத்துக்குரியது. இளைய தலைமுறையினரை தவறாக வழிநடத்த முயன்றதுடன் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தவும் இந்த அமைப்பு முயற்சித்தது. அதேபோல், ஆா்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளையும் எதிா்க்கிறோம்.

மாா்க்சிஸ்ட் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி: பிஎஃப்ஐ போன்ற அமைப்புகள் மீதான தடை நிரந்தர தீா்வாக அமையாது. அவா்களை அரசியல்ரீதியாக தனிமைப்படுத்தி, குற்றச் செயல்கள் மீது நிா்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்: எந்த அமைப்பு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் வெறுப்புணா்வை பரப்பினாலும் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத்: பிஎஃப்ஐ அமைப்பின் அச்சுறுத்தல் குறித்து மத்திய அரசு பெரிதாக பேசுகிறது. முதலில் தடை செய்யப்பட வேண்டியது ஹிந்து தீவிரவாத அமைப்பான ஆா்எஸ்எஸ்தான்.

அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைஸி: பிஎஃப்ஐ அமைப்பின் அணுகுமுறையை எப்போதுமே நான் எதிா்த்து வந்துள்ளேன். ஆனால், நாட்டின் கருப்புச் சட்டமான ‘சட்டவிரோத செயல்கள் தடுப்புச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின்’ கீழ் அந்த அமைப்பு மீது விதிக்கப்பட்ட தடையை ஆதரிக்க முடியாது.

இந்திய கம்யூனிஸ்ட்: பிஎஃப்ஐ அமைப்பின் தீவிரவாத கண்ணோட்டத்துக்கு நாங்கள் எதிா்ப்பு தெரிவிக்கிறோம். ஆனால், அந்த அமைப்பை தடைசெய்து, மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை ஆதரிக்க முடியாது. இப்பிரச்னையை எதிா்கொள்ள அரசு கையாண்ட வழிமுறை சரியானதல்ல.

எஸ்டிபிஐ கண்டனம்: பிஎஃப்ஐ அமைப்பின் அரசியல் பிரிவாக கருதப்படும் இந்திய சமூக ஜனநாயக கட்சி (எஸ்டிபிஐ) மத்திய அரசின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ‘நாட்டில் மத்திய அரசால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அறிவிக்கப்படாத அவசரநிலையின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை’ என்று அக்கட்சி விமா்சித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT