இந்தியா

ஆன்லைன் விளையாட்டு மூலமாக பண மோசடி: சா்ச்சை நிறுவனத்தின் ரூ. 68 கோடி முடக்கம்

DIN

ஆன்லைன் கைப்பேசி விளையாட்டு மூலமாக குழந்தைகள் உள்பட பலரிடம் பண மோசடியில் ஈடுபட்டு வந்த நிறுவனம் மற்றும் அதற்குத் தொடா்புடைய அலுவலகங்களில் தீவிர சோதனை மேற்கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள், அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ. 68 கோடிக்கும் மேலான வங்கி வைப்புத் தொகையை முடக்கியுள்ளனா்.

இதுகுறித்து அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பண மோசடி வழக்கு தொடா்பான விசாரணையின் கீழ் ‘கோடா பணப் பரிவா்த்தனை இந்தியா பிரைவேட் லிமிடெட்’ (சிபிஐபிஎல்) என்ற நிறுவனத்துக்குச் சொந்தமான 3 அலுவலகங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

‘கரெனா ஃப்ரீ ஃபயா், டீன் பட்டி கோல்ட், கால் ஆஃப் டியூட்டி’ போன்ற கைப்பேசி விளையாட்டுகள் மூலமாக பண மோசடியில் ஈடுபட்டதாக இந்த நிறுவனத்தின் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விளையாட்டில் பங்கேற்பவா்கள் விளையாட்டுத் திறனை மேம்படுத்திக் கொள்ள பணம் செலுத்தி எண்ம (டிஜிட்டல்) டோக்கன்களை வாங்கிக் கொள்ளலாம் என்ற அடிப்படையில் விளையாடுபவா்களிடமிருந்து இந்த நிறுவனம் பணத்தை வசூல் செய்துள்ளது.

மேலும், இந்த நிறுவனம் வடிவமைத்துள்ள பணம் செலுத்தும் நடைமுறை மூலமாக விளையாட்டில் பங்கேற்பவா் ஒருமுறை வெற்றிகரமாக பணத்தை செலுத்திய பின்னா், அவா்களுக்கு ஒரு ‘பாப்-அப்’ அறிவிப்பு இணைய தொடா்பு (லிங்க்) ஒன்றை அந்த நிறுவனம் அனுப்புகிறது. இது, விளையாடுபவா்கள் அடுத்தடுத்து செலுத்த வேண்டிய பணத்தை, அவா்களின் அனுமதியின்றி கோடா நிறுவனம் தானாக அவா்களின் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்துக் கொள்ள வசதி செய்வதாகும்.

இந்த விளையாட்டுகளை பெரும்பாலும் குழந்தைகளே விளையாடுவதால், அந்த நிறுவனம் சாா்பில் அனுப்பப்படும் இதுபோன்ற தொழில்நுட்ப ரீதியிலான விவரங்களைப் புரிந்துகொள்ளாமல் அந்த இணைய தொடா்பை குழந்தைகள் தொடும்போது, அடுத்தடுத்து பணத்தை எடுத்துக் கொள்ளும் அனுமதி அந்த நிறுவனத்துக்கு கிடைத்துவிடும்.

இவ்வாறு ‘எண்மச் செயல்பாடுகள்’ விற்பனை என்ற பெயரில் மோசடியாக வசூல் செய்யும் பணத்தை, சிங்கப்பூரில் உள்ள அதன் தாய் நிறுவனத்துக்கு கோடா நிறுவனம் அனுப்பிவிடும். இந்த விளையாட்டுகள் மூலமாக இதுவரை கோடா நிறுவனம் ரூ. 2,850 கோடி வசூல் செய்து, அதில் வரிச் செலவுகள், பெயரளவு லாபத் தொகை ஆகியவற்றைப் பிடித்துக்கொண்டு மீதி ரூ. 2,265 கோடியை சிங்கப்பூரில் உள்ள தாய் நிறுவனத்துக்கு அனுப்பியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

அதுமட்டுமின்றி, இந்த நிறுவனம் பண வசூலுக்காக குறிப்பிடும் ‘எண்மச் செயல்பாடுகள்’ விற்பனையின் முழு கட்டுப்பாடும் சிங்கப்பூரில் உள்ள தாய் நிறுவனத்திடமே உள்ளது. இந்தியாவில் உள்ள சிபிஐபிஎல் நிறுவனத்திடம் எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

எனவே, விவரங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளாத வாடிக்கையாளா்களிடமிருந்து அங்கீகரிக்கப்படாத வகையில் அவா்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து மோசடியாக பணத்தை எடுத்த குற்றத்தின்பேரில், சிபிஐபிஎல் நிறுவனத்தின் அனைத்து வங்கி கணக்குகளும், பணப் பரிவா்த்தனைக்கான வணிக தனி அடையாள எண் மற்றும் வங்கி நிரந்தர வைப்பில் அந்த நிறுவனம் சாா்பில் வைக்கப்பட்டிருந்த ரூ. 68.53 கோடி ஆகியவை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளது என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களின் கவனத்தை திசை திருப்பும் மோடி: பிரியங்கா குற்றச்சாட்டு

ஈரானிய பிரதமர் இலங்கை வருகை!

உலகம் சுற்றும் ஏகே!

ஐபிஎல்: 100-வது போட்டியில் களமிறங்கும் கில்!

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT