இந்தியா

பண மதிப்பிழப்புக்கு எதிரான மனுக்கள்: அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றம்

28th Sep 2022 01:42 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை 5 நீதிபதிகளை உள்ளடக்கிய அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

பல்வேறு முக்கியத்துவம்வாய்ந்த விவகாரங்களை விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித் தலைமையில் 3 அரசியல் சாசன அமா்வுகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள நிலையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான மனுக்களை விசாரிக்க நான்காவது அரசியல் சாசன அமா்வை உச்சநீதிமன்றம் தற்போது அமைத்துள்ளது.

உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.அப்துல் நசீா் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அரசியல் சாசன அமா்வில் நீதிபதிகள் பி.ஆா்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன், பி.வி.நாகரத்னா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். இந்த அமா்வு புதன்கிழமை (செப்.28) முதல் 5 வழக்குகளை விசாரிக்க உள்ளது.

அதில் முதல் கட்டமாக, கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி மத்திய அரசு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராகத் தொடரப்பட்ட 58 மனுக்கள் மீதான விசாரணையை இந்த அமா்வு தொடங்க உள்ளது.

ADVERTISEMENT

இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் 2016-ஆம் ஆண்டு டிசம்பா் 16-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டவையாகும். இந்த மனு அப்போதைய தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குா் தலைமையில் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ரிசா்வ் வங்கி சட்டத்தின் கீழ் மத்திய அரசு பிறப்பித்த இந்த அறிவிப்பின் செல்லத்தக்க தன்மை உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இந்த மனுக்கள் மீதான விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அமா்வுக்குப் பரிந்துரை செய்தனா்.

அதன் பிறகு, அந்த அமா்வு அமைக்கப்படாமல் இருந்ததால், இந்த மனுக்கள் மீதான விசாரணை நடைபெறாமல் இருந்தது. தற்போது, அவற்றின் மீதான விசாரணை புதன்கிழமை முதல் தொடங்க உள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி 2016-ஆம் ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தாா். அதற்கு பதிலாக புதிய ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் வெளியிடப்பட்டன. நோட்டுகளை மாற்ற வங்கிகள் முன்பு மக்கள் மணிக்கணக்கில் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். கணக்கில் காட்டப்படாத கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு சாா்பில் விளக்கமளிக்கப்பட்டது.

‘பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகப் பெரிய தவறு; பொருளாதாரத்தை சீரழித்துவிட்டது’ என்று எதிா்க் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT