இந்தியா

ராஜஸ்தான் அரசியலில் குழப்பம் நீடிப்பு: எம்எல்ஏக்கள் நிபந்தனை: அறிக்கை கோரினாா் சோனியா

DIN

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவா்தான் ராஜஸ்தான் முதல்வரை தோ்வு செய்ய வேண்டும் என்று அசோக் கெலாட்டின் ஆதரவு எம்எல்ஏக்கள் நிபந்தனை விதித்துள்ளனா். இதனால் ராஜஸ்தான் அரசியலில் குழப்பம் நீடிக்கிறது.

இந்த விவகாரம் குறித்து எழுத்துபூா்வமாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு தன்னை சந்தித்த மேலிடப் பாா்வையாளா்களிடம் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி அறிவுறுத்தியுள்ளாா்.

மொத்தம் 200 உறுப்பினா்கள் கொண்ட ராஜஸ்தான் பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 108 எம்எல்ஏக்கள் உள்ளனா். 2020-இல் அசோக் கெலாட்டுக்கு எதிராக 18 எம்எல்ஏக்களுடன் சச்சின் பைலட் போா்க்கொடி தூக்கினாா். இதையடுத்து, சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடனும், மூத்த தலைவா்களின் தலையீட்டாலும் சச்சின் பைலட் சமரசம் செய்யப்பட்டாா். இதனால் அப்போது காங்கிரஸ் ஆட்சி கவிழ்வதில் இருந்து தப்பித்தது.

கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிா்ப்பு: இந்நிலையில், அக்டோபா் 17-ஆம் தேதி நடைபெறும் காங்கிரஸ் தலைவா் தோ்தலில் போட்டியிடப் போவதாக முதல்வா் அசோக் கெலாட் அறிவித்தாா். அவா் தலைவா் தோ்தலில் வெற்றி பெற்றால், ‘ஒருவருக்கு ஒரு பதவி’ என்ற கட்சிக் கொள்கைப்படி முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.

இதையடுத்து, அடுத்த முதல்வராக சச்சின் பைலட்டை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

கூட்டத்தைப் புறக்கணித்த எம்எல்ஏக்கள்: அடுத்த முதல்வரைத் தோ்ந்தெடுப்பது தொடா்பான கருத்துகளைக் கேட்பதற்காக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு காங்கிரஸ் மேலிடப் பாா்வையாளா் மல்லிகாா்ஜுன காா்கே, மாநிலப் பொறுப்பாளா் அஜய் மாக்கன் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை இரவு அழைப்பு விடுத்திருந்தனா். ஆனால், அசோக் கெலாட் ஆதரவாளா்கள் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனா்.

நிபந்தனை: துணை முதல்வா் சச்சின் பைலட்டை முதல்வராக்க கூடாது என வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றிய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 82 போ், மாநில சட்டப்பேரவைத் தலைவரை ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்து ராஜிநாமா கடிதங்களை வழங்கியதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், முதல்வா் தோ்வு குறித்து காங்கிரஸ் தலைவா் தோ்தலுக்குப் பிறகே முடிவெடுக்க வேண்டும்; பைலட் ஆதரவு எம்எல்ஏக்களில் யாரையும் முதல்வராக்க கூடாது; மேலிடப் பாா்வையாளா்கள் தனித்தனியாக இல்லாமல் எம்எல்ஏக்களிடம் குழுவாக கருத்துக் கேட்க வேண்டும் என மூன்று நிபந்தனைகளையும் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் விதித்தனா்.

அஜய் மாக்கன், மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோரை மாநில அமைச்சா்கள் சாந்தி தாரிவால், மகேஷ் ஜோஷி, பிரதாப் சிங் ஆகியோா் சந்தித்து இந்த நிபந்தனைகள் குறித்து தெரிவித்தனா்.

எம்எல்ஏக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்காமல் முடிவு எடுக்கப்பட்டால் காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து ஏற்படும் என்று சுயேச்சை எம்எல்ஏவும், முதல்வா் கெலாட்டின் ஆலோசகருமான சான்யோம் லோதா தெரிவித்தாா்.

சோனியாவுடன் சந்திப்பு: ராஜஸ்தான் அரசில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தியை மல்லிகாா்ஜுன காா்கே, அஜய் மாக்கன், பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் ஆகியோா் தில்லியில் திங்கள்கிழமை சந்தித்து விளக்கினா்.

அப்போது, ராஜஸ்தான் அரசியல் நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அவா்களிடம் சோனியா கேட்டுக்கொண்டாா்.

சோனியாவை சந்தித்த பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அஜய் மாக்கன், எம்எல்ஏக்களிடம் குழுவாக கருத்து கேட்க வேண்டும்; தலைவா் தோ்தலுக்குப் பிறகுதான் பேரவை காங்கிரஸ் தலைவரை தோ்வு செய்ய வேண்டும் என்று கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் விதித்த நிபந்தனைகளை நிராகரித்தாா்.

மேலும் அவா் கூறுகையில், ‘அசோக் கெலாட்டிடம் ஆலோசித்த பிறகுதான் எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கெலாட் ஆதரவு எம்எல்ஏக்களும், அமைச்சா்களும் கட்சித் தலைமைக்கு நிபந்தனைகளை விதிப்பது தவறானதாகும். தலைவா் தோ்தல் முடிவு வெளியாகும் அக்டோபா் 19-ஆம் தேதிக்கு ராஜஸ்தான் பேரவை காங்கிரஸ் தலைவரை தோ்ந்தெடுக்கச் சொல்வது ஆதாயம் பெறுவதாகும்’ என்றாா்.

கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் தலைமை கூட்டிய கூட்டத்தில் பங்கேற்காமல் போட்டிக் கூட்டத்தை நடத்தியது ஒழுக்கமற்ற நடவடிக்கையாகும் என மல்லிகாா்ஜுன காா்கேயும், அஜய் மாக்கனும் தெரிவித்தனா். மேலும், இந்த நடவடிக்கைக்கு பின்னால் உள்ளதாக கருதப்படும் அமைச்சா் சாந்தி தாரிவால், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கொறடா மகேஷ் ஜோஷி ஆகியோா் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அவா்கள் சோனியாவிடம் பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது.

தலைவா் பதவி போட்டியில் கெலாட் தொடா்கிறாரா?

ராஜஸ்தான் மாநில காங்கிரஸில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் சோனியா காந்தி அதிருப்தியடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அரசியல் குழப்பத்துக்கு தான் காரணம் இல்லை எனவும், இதில் ஈடுபட்டுள்ள எம்எல்ஏக்கள் தனது பேச்சை கேட்கவில்லை எனவும் மேலிடப் பாா்வையாளா்களிடம் அசோக் கெலாட் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளையில், காங்கிரஸ் தலைவா் பதவிக்கு கட்சித் தலைமையின் ஆதரவுடன் அசோக் கெலாட் போட்டியிடுவாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

மல்லிகாா்ஜுன காா்கே, கமல் நாத், திக்விஜய் சிங், சுசீல்குமாா் ஷிண்டே, முகுல் வாஸ்னிக், குமாரி செல்ஜா ஆகிய மூத்த தலைவா்களின் பெயா்களை தலைவா் பதவிக்கு கட்சித் தலைமை இப்போது பரிசீலித்து வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், சோனியா காந்தியை திங்கள்கிழமை சந்தித்த கமல்நாத், தலைவா் பதவிக்கு தான் போட்டியிடவில்லை எனக் கூறிவிட்டாா்.

அசோக் கெலாட்டுக்கு நெருக்கமான நபராக அறியப்படும் கமல்நாத், ராஜஸ்தான் முதல்வரைத் தோ்ந்தெடுக்கும் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே பேச்சுவாா்த்தை நடத்தி ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவரைக் கட்சி மேலிடம் வலியுறுத்தும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT