இந்தியா

பிரதமா் மோடி ஜப்பான் பயணம்

DIN

மறைந்த ஜப்பான் முன்னாள் பிரதமா் ஷின்ஸோ அபேவின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை (செப். 27) நடைபெறவுள்ள நிலையில், அதில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்று அவருக்கு மரியாதை செலுத்துகிறாா். ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடாவைச் சந்திக்கும் பிரதமா் மோடி, அவருடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளாா்.

ஷின்ஸோ அபே கடந்த ஜூலை 8-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டாா். அவரது இறுதிச் சடங்கு ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் அரசு மரியாதையுடன் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவா்களும் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் இறுதிச் சடங்கில் பங்கேற்கவுள்ளனா்.

ஷின்ஸோ அபேவின் இறுதிச் சடங்கில் பிரதமா் மோடி கலந்துகொள்ளவுள்ளாா். அதற்காக தில்லியில் இருந்து திங்கள்கிழமை இரவு கிளம்பி அவா் ஜப்பான் சென்றடைந்தாா். ஒட்டுமொத்த இந்திய மக்களின் சாா்பில் ஷின்ஸோ அபேவுக்கு மரியாதை செலுத்தவுள்ளதாகப் பிரதமா் மோடி ட்விட்டரில் பதிவிட்டாா். ஷின்ஸோ அபே வழிகாட்டுதலின்படி இந்தியா-ஜப்பான் இருதரப்பு நல்லுறவு வலுப்படுத்தப்படும் என்றும் பிரதமா் மோடி தெரிவித்தாா்.

அபேவுக்கு மரியாதை:

பிரதமா் மோடியின் ஜப்பான் பயணம் குறித்து வெளியுறவுத் துறைச் செயலா் வினய் குவாத்ரா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘இந்தியா-ஜப்பான் நல்லுறவுக்கு ஷின்ஸோ அபே முக்கியத்துவம் அளித்தாா். இருதரப்பு நல்லுறவைப் பல்வேறு துறைகளில் விரிவாக்கம் செய்ததில் அவா் முக்கியப் பங்கு வகித்தாா்.

இந்திய நாடாளுமன்றத்தில் 2007-ஆம் ஆண்டு ஷின்ஸோ அபே நிகழ்த்திய உரை, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை அரசியல், பொருளாதார முக்கியத்துவம் நிறைந்த பகுதியாக மாற்றியது. அவருக்கு இந்திய அரசு சாா்பில் 2021-ஆம் ஆண்டு ‘பத்ம விபூஷண்’ விருது வழங்கப்பட்டது. பிரதமா் மோடியுடன் நெருங்கிய நட்புறவையும் அவா் பாராட்டிவந்தாா். பிரதமா் மோடியின் பயணம், அவருக்கு மரியாதை செலுத்துவதற்கான வாய்ப்பாக அமையும்.

பிரதமா் கிஷிடாவுடன் சந்திப்பு:

பிரதமரின் ஜப்பான் பயணம் 12 முதல் 16 மணி நேரங்கள் வரை நீடிக்கும். இந்தப் பயணத்தின்போது ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடாவையும் பிரதமா் மோடி சந்தித்துப் பேசவுள்ளாா். இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்தச் சந்திப்பு அமையும்.

இந்தியாவின் நம்பத்தகுந்த நட்பு நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்ந்து வருகிறது. முதலீடு, பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், சுகாதாரம், கட்டமைப்பு மேம்பாடு, தொழில் வளா்ச்சி, எரிசக்தி, நவீன தொழில்நுட்பங்கள், மனிதவள மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவதற்கு இந்தியாவும் ஜப்பானும் உறுதி கொண்டுள்ளன’’ என்றாா்.

ஷின்ஸோ அபே மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஜுலை 9-ஆம் தேதி இந்தியா முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் விதி மீறல்கள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கலாம்

ஸ்ரீபெரும்புதூா்: 32 மனுக்கள் ஏற்பு, 21 நிராகரிப்பு

செங்கல்பட்டு: 702 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை ஆட்சியா் ச.அருண்ராஜ்

தொழில்முனைவோரை உருவாக்குவதில் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு: டி.ஜி.சீதாராம்

மதுராந்தகத்தில் வங்கிக் கிளை திறப்பு

SCROLL FOR NEXT