இந்தியா

ஓராண்டில் 9 துறைகளில் 10 லட்சம் வேலைவாய்ப்பு அதிகரிப்பு: காலாண்டு ஆய்வறிக்கையில் தகவல்

27th Sep 2022 11:41 PM | நமது சிறப்பு நிருபா்

ADVERTISEMENT

ஓராண்டில் 9 துறைகளில் வேலைவாய்ப்புகள் 10 லட்சம் அதிகரித்துள்ளதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.
மொத்த வேலைவாய்ப்பில் பெரும் பங்காற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 துறைகளில் முறைப்படுத்தப்பட்ட, முறைசாரா வேலைவாய்ப்பு (விவசாயம் தவிர்த்து) குறித்த தகவல்களைக் காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வறிக்கைகள் தொடர்ந்து வழங்குகின்றன.
அதன்படி இந்தக் காலாண்டு வேலைவாய்ப்பின் 4-ஆவது சுற்று ஆய்வறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டு மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அகில இந்திய காலாண்டு முதல் சுற்று ஆய்வில் கடந்த 2021 ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி 3.08 கோடி வேலைவாய்ப்புகள் இருந்தன.
இது தற்போது 4-ஆவது காலாண்டில் (ஜனவரி - மார்ச் 2022) 3.18 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 9 துறைகளில் சுமார் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
பொருளாதாரத்தின் முறைப்படுத்தப்பட்ட துறைகளில் வேலைவாய்ப்பு மற்றும் அது சம்பந்தமான முக்கியத் தகவல்களை திரட்டுவதற்காக அகில இந்திய காலாண்டு ஆய்வின் ஒரு பகுதியாக காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வு 2021-இல் அறிமுகப்படுத்தப்பட்டு முதல் அறிக்கை 2021 செப்டம்பரில் வெளியிடப்பட்டது.
ஒவ்வொரு காலண்டிலும் சுமார் 12, 000 அமைப்புகள் தொடர்பான தகவல்கள் திரட்டப்படுகின்றன. கடைசியாக 3-ஆம் காலாண்டில் (செப்டம்பர் - டிசம்பர் 2021) 3.14 கோடியாக இருந்த மதிப்பிடப்பட்ட வேலைவாய்ப்பு, 4-ஆவது காலாண்டில் (ஜனவரி - மார்ச், 2022) 3.18 கோடியாக உயர்ந்துள்ளது.
பொருளாதாரத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்து வருவதை 4-ஆவது காலாண்டு அறிக்கை மூலம் தெரிய வருகிறது என்றார் அமைச்சர்.
முக்கிய அம்சங்கள்: நான்காவது காலாண்டில் 5.31 லட்சம் நிறுவனங்களில் மொத்தம் 3.18 கோடி தொழிலாளர்கள் பணிபுரிந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. பணியாளர்களின் மொத்த எண்ணிக்கையில் முதலிடத்தில் உற்பத்தித் துறை (38.5 சதவீதம்), அடுத்தடுத்து கல்வித் துறை (21.7சதவீதம்), தகவல் தொழில்நுட்பம் ( 12சதவீதம்), சுகாதாரத் துறை (10.6 சதவீதம்) இடம் பெற்றுள்ளன.
3-ஆவது காலாண்டில் 31.6 சதவீதமாக இருந்த பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை, 4-ஆவது காலாண்டில் 31.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT