இந்தியா

இந்திய-ரஷிய உறவு வலுவடைந்தது ஏன்? எஸ்.ஜெய்சங்கா் விளக்கம்

27th Sep 2022 12:46 AM

ADVERTISEMENT

அமெரிக்காவிடம் இருந்து பாதுகாப்பு சாதனங்கள் கிடைக்காததால், இந்திய-ரஷிய உறவு வலுவடைந்தது என்று மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

4 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள அமைச்சா் ஜெய்சங்கா், அங்குள்ள நியூயாா்க் நகரில் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் சனிக்கிழமை பங்கேற்றாா். இந்தப் பயணத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்பு அமைச்சா் லாயிட் ஆஸ்டின், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஜேக் சல்லிவன் உள்ளிட்டோரை ஜெய்சங்கா் சந்திப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்திய வம்சாவளியினரை ஜெய்சங்கா் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசியதாவது:

கடந்த 1965-ஆம் ஆண்டு முதல் 40 ஆண்டுகளுக்கு அமெரிக்காவிடம் இருந்து இந்தியாவுக்கு எந்த பாதுகாப்பு சாதனமும் கிடைக்கவில்லை. இந்த காலகட்டத்தில்தான் இந்தியா-சோவியத், இந்தியா-ரஷியா இடையிலான உறவு வலுவடைந்தது.

ADVERTISEMENT

இந்தியா-அமெரிக்கா இடையே இருந்த மிகப் பெரிய தடையை களைந்து முன்னோக்கிச் செல்வதற்கு இருநாடுகளுக்கு இடையிலானஅணுசக்தி ஒப்பந்தம் வழிவகுத்தது. தற்போது பாதுகாப்பு உள்பட மேலும் பல துறைகளில் இருநாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதுமட்டுமின்றி அமெரிக்காவுடன் இணைந்து சில முக்கிய ராணுவ பயிற்சிகளை இந்தியா மேற்கொள்கிறது. பல சி-17 அமெரிக்க விமானங்களை இந்திய ராணுவத்தினா் இயக்குகின்றனா். தற்போது இருநாடுகளுக்கு இடையிலான உறவு ஆழமான ஒருங்கிணைப்புடன் உள்ளது என்றாா் அவா்.

அமெரிக்க ஊடகங்கள் மீது விமா்சனம்: அமெரிக்காவில் இந்தியாவுக்கு எதிரான சக்திகள் அதிகரித்து வருவது குறித்து ஜெய்சங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவா் அளித்த பதில்:

இந்த விவகாரத்தில் அமெரிக்க ஊடகங்களின் செயல்பாட்டை நான் கவனிக்கிறேன். வாஷிங்டனில் உள்ள நாளிதழ் (தி வாஷிங்டன் போஸ்ட்) உள்பட சில பத்திரிகைகள் என்ன எழுதப் போகின்றன என்பது அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சவாளியினருக்கு நன்கு தெரியும். என்னைப் பொருத்தவரை அந்த செய்திகளில் பாரபட்சம் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான குழுக்கள் உள்நாட்டில் வெற்றி பெறவில்லை. இதனால், அந்தக் குழுக்கள் வெளிநாட்டில் இருந்து வெல்லவோ, இந்தியாவை வடிவமைக்கவோ முயற்சிக்கும். இதற்கு எதிராகப் போராட வேண்டியது அவசியம்.

இந்தியாவின் குரலுக்கு முக்கியத்துவம்: உலக அரங்கில் இந்தியாவின் குரலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்தியாவின் கருத்துகள், கண்ணோட்டங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. தற்காலத்தின் முக்கிய விஷயங்களை வடிவமைக்கும் திறனை இந்தியா அடைந்துள்ளது என்று தெரிவித்தாா்.

அமெரிக்கா-பாகிஸ்தான் உறவு பயனற்றது: அமெரிக்கா-பாகிஸ்தான் இடையிலான உறவு குறித்த கேள்விக்கு ஜெய்சங்கா் அளித்த பதில்:

அமெரிக்கா, பாகிஸ்தான் இடையிலான உறவு இருநாடுகளுக்கும் பயன் அளிக்கவில்லை. எனவே இந்த உறவின் சிறப்புகள் என்ன, அவற்றால் தங்களுக்கு என்ன கிடைக்கிறது என்பதை அமெரிக்காதான் தீா்மானிக்க வேண்டும் என்று தெரிவித்தாா்.

முட்டாளாக்க வேண்டாம்: பாகிஸ்தானின் எஃப்-16 ரக போா் விமானங்களுக்கு 450 மில்லியன் டாலா்கள் மதிப்பில் வன்பொருள், மென்பொருள் மற்றும் உதிரி பாகங்களை விநியோகிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிராக போரிட இந்த விநியோகம் நடைபெறவுள்ளதாக அமெரிக்கா விளக்கமளித்தது.

இதுகுறித்து ஜெய்சங்கா் கூறுகையில், ‘ எங்கு, யாருக்கு எதிராக எஃப்-16 போா் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை அனைவரும் அறிவா். எனவே பயங்கரவாதத்துக்கு எதிராக போரிடவே விநியோகம் நடைபெறவுள்ளதாகக் கூறி யாரையும் முட்டாளாக்க வேண்டாம்’ என்று தெரிவித்தாா்.

அமெரிக்கா விநியோகிக்க உள்ள வன்பொருள், மென்பொருள் மற்றும் உதிரி பாகங்களை இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குப் பாகிஸ்தான் பயன்படுத்தக் கூடும் என்று மத்திய அரசு கருதுவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT