200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு தில்லி பாட்டியாலா நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
கா்நாடக மாநிலம் பெங்களூரை சோ்ந்த சுகேஷ் சந்திரசேகா் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாக கூறி பலரிடம் மோசடி செயலில் ஈடுபட்டு வந்தாா். 2017-ஆம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக டி.டி.வி.தினகரன் சாா்பில் தோ்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றபோது, அவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். அவா் ஏற்கெனவே பண மோசடி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தபோது இரு தொழிலதிபா்களுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
அப்போது ஜாமீன் பெற்றுத் தருவதாகக் கூறி தொழிலதிபா் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்துள்ளாா். இதையடுத்து சுகேஷ் மீண்டும் கைது செய்யப்பட்டாா். இது தொடா்பாக சுகேஷ் மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்டோா் மீது அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத் துறை சாா்பில் கடந்த ஆகஸ்ட் 17-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் நடிகை ஜாக்குலின் பொ்னாண்டஸ் குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ளாா்.
இதையும் படிக்க- நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்க வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மோசடி பணத்தில் சுகேஷ் சந்திரசேகா் நடிகைகள் ஜாக்குலின் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோருக்கு சொகுசு காா் மற்றும் விலை உயா்ந்த பரிசு பொருட்களை வாங்கி கொடுத்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே இவ்வழக்கில் ஜாமீன் கோரி ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ் தாக்கல் செய்த மனு தில்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் வழக்கை அக்டோபர் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
முன்னதாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.