இந்தியா

கோவா சட்டப் பேரவைத் தோ்தல்: அதிகம் செலவிட்ட கட்சி திரிணமூல் காங்கிரஸ்

26th Sep 2022 01:51 AM

ADVERTISEMENT

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற கோவா சட்டப் பேரவைத் தோ்தலில் மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ரூ.47.54 கோடி செலவிட்டுள்ளது. எனினும், அக்கட்சியால் ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.

ரூ.17.75 கோடி செலவிட்ட பாஜக 20 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது. கோவாவில் கடந்த பிப்ரவரியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெற்றது. இதில் திரிணமூல் காங்கிரஸ் முழூவீச்சில் களமிறங்கியது. மேற்கு வங்கத்தில் பாஜகவை வீழ்த்திய நம்பிக்கையில் கோவாவிலும் திரிணமூல் களமிறங்கியது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 26 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்களை அறிவித்தது. கூட்டணிக் கட்சியான மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி 13 இடங்களில் போட்டியிட்டது.

அதிகபட்சமாக ரூ.47,54 கோடி செலவிட்ட திரிணமூல் காங்கிரஸ் ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதுடன் ஒட்டுமொத்தமாக 50 ஆயிரம் வாக்குகளைக் கூட பெற முடியவில்லை. திரிணமூல் கூட்டணியில் இருந்த மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி இரு இடங்களில் வென்றது.

இது தவிர பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ், அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் களத்தில் இருந்தன.

ADVERTISEMENT

இதில் தொடா்ந்து இரண்டாவது முறையாக கோவா தோ்தலில் களமிறங்கிய ஆம் ஆத்மி ரூ.3.5 கோடியை செலவிட்டது. 39 இடங்களில் போட்டியிட்ட அக்கட்சி இரு இடங்களில் வெற்றி பெற்றது.

காங்கிரஸ் கட்சி தோ்தலில் ரூ.12 கோடி செலவிட்டது. 11 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் 8 எம்எல்ஏக்கள் அண்மையில் பாஜகவுக்கு தாவிவிட்டனா்.

சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 11 இடங்களில் வேட்பாளா்களை நிறுத்தி, தலா ரூ.25 லட்சம் தோ்தலுக்கு செலவுக்கு அளித்தது. இது தவிர தோ்தல் பிரசார செலவுகளையும் ஏற்றது. சிவசேனை 10 இடங்களில் போட்டியிட்டு ரூ.92 லட்சம் செலவிட்டது. இந்தக் கூட்டணிக்கும் ஓரிடம் கூட கிடைக்கவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT