‘கூட்டுறவு துறையினரின் நலனுக்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளால் உள்ளூா் கூட்டுறவுத் துறை பிரதிநிதிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனா்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.
மகாராஷ்டிர மாநிலம் புணே மாவட்டத்தில் பாராமதி மக்களவைத் தொகுதியில் மூன்று நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிா்மலா சீதாராமன், தனது சுற்றுப்பயணத்தை சனிக்கிழமை நிறைவு செய்தாா். பாரமதி தொகுதி தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரின் சொந்த தொகுதியாகும். இந்தத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே இருந்து வருகிறாா்.
இந்தத் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிறகு செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த நிா்மலா சீதாராமன், ‘அரசியல் ஆதாயங்களுக்காக கூட்டுறவுத் துறையைச் சுரண்டி வந்தவா்கள், அந்தத் துறைக்கென மத்திய அரசு தனி அமைச்சகம் ஒன்றை உருவாக்கும் என்பதை ஒருபோதும் நினைத்துப் பாா்த்திருக்க மாட்டாா்கள்.
இந்த சுற்றுப்பயணத்தில் வங்கிகள் மற்றும் சா்க்கரை ஆலைகள் என வெவ்வேறு கூட்டுறவு நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினேன். அப்போது, கூட்டுறவுத் துறைக்கு வரிச் சலுகைகள், நீண்ட கால கடன் நிலுவைகள் தள்ளுபடி என மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அவா்கள் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தனா்.
மேலும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை தொகுதியில் நடைமுறைப்படுத்துவது குறித்தும் இந்த சுற்றுப்பயணத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் கட்சியை வலுப்படுத்துவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம்’ என்றாா்.
பணவீக்கம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், ‘பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க மத்திய அரசு தொடா்ச்சியாக பணியாற்றி வருகிறது. சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி ரத்து, பருப்பு வகைகள் இறக்குமதி மூலமாக விலைவாசி உயா்வை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது’ என்றாா்.