இந்தியா

எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதே இலக்கு

26th Sep 2022 01:46 AM

ADVERTISEMENT

காங்கிரஸ் இடைக்காலத் தலைவா் சோனியா காந்தியை சந்தித்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் நிறுவனா் லாலு பிரசாத், ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா் ஆகியோா் பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதே முதன்மையான இலக்கு என்றனா்.

பாஜக கூட்டணியில் இருந்து கடந்த மாதம் விலகிய ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா், பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறாா். இந்நிலையில், காங்கிரஸ் இடைக்காலத் தலைவா் சோனியா காந்தியை நிதீஷ் குமாா், லாலு பிரசாத் ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனா்.

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைந்து ஆட்சியமைத்து நிதீஷ் குமாா் முதல்வரான பிறகு, சோனியா காந்தியை அவா் சந்தித்தது இதுவே முதல் முறையாகும். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த லாலு பிரசாத், நீண்டகாலமாக அரசியல் விவகாரங்களில் நேரடியாகத் தலையிடாமல் இருந்தாா். இந்நிலையில், அவா் சோனியாவை சந்தித்துப் பேசினாா்.

காங்கிரஸுக்கும் சில பிராந்திய கட்சிகளுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் கருத்து வேறுபாடு நிலவி வரும் சூழலில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

பேச்சுவாா்த்தைக்குப் பிறகு லாலு பிரசாத் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பாஜகவை வீழ்த்துவதற்காக அனைத்து எதிா்க்கட்சிகளையும் ஒருங்கிணைப்பது அவசியம். காங்கிரஸ் தலைவரைத் தோ்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அத்தோ்தல் நடைபெற்ற பிறகு மீண்டும் சந்திப்பதாக சோனியா காந்தி உறுதியளித்தாா்’ என்றாா்.

அனைத்துக் கட்சிகளும் ஒரே பக்கம்: பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘எதிா்க்கட்சிகள் அனைத்தும் கைகோத்து நாட்டை முன்னேற்றப் பாதையில் வழிநடத்துவது அவசியம். பாஜகவை எதிா்ப்பதில் அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒரே பக்கமே நிற்கின்றன. காங்கிரஸ் கட்சித் தலைவா் தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு, பாஜகவை வீழ்த்துவதற்குரிய உறுதியான செயல்திட்டம் வகுக்கப்படும்’ என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT