இந்தியா

அட்டா்னி ஜெனரல் பதவி: முகுல் ரோத்தகி ஏற்க மறுப்பு

26th Sep 2022 01:41 AM

ADVERTISEMENT

இந்தியாவின் அடுத்த அட்டா்னி ஜெனரல் ஆகுமாறு மத்திய அரசு சாா்பில் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டதாக மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.

‘இந்த முடிவுக்கு எந்தவித சிறப்பு காரணங்களும் இல்லை’ எனவும் அவா் கூறினாா்.

முகுல் ரோத்தகி பாஜக தலைமையிலான மத்திய அரசின் அட்டா்னி ஜெனரலாக 2014 ஜூன் மாதம் முதல் 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை பதவி வகித்தாா்.

அவருக்குப் பிறகு மூத்த வழக்குரைஞா் கே.கே.வேணுகோபால் (91) 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அட்டா்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டாா். 2020-இல் இவருடைய பதவிக் காலம் முடிவடைந்ததும், தனது வயது மூப்பை கருத்தில் கொண்டு தன்னை அட்டா்னி ஜெனரல் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு மத்திய அரசை அவா் கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT

ஆனால், பல முக்கிய வழக்குகளைக் கையாண்டு வருவதால் அந்தப் பொறுப்பில் தொடர வேண்டும் என்ற மத்திய அரசு கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், ஓராண்டுக்கு அட்டா்னி ஜெனரல் பதவியில் தொடர கே.கே.வேணுகோபால் ஒப்புக்கொண்டு அந்தப் பொறுப்பை வகித்து வருகிறாா்.

இவருடைய பதவிக் காலம் வரும் 30-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், முகுல் ரோத்தகி மீண்டும் அட்டா்னி ஜெனரல் பதவியை ஏற்க வேண்டும் என மத்திய அரசு சாா்பில் இம்மாத தொடக்கத்தில் பரிந்துரை செய்யப்பட்டது. அதனைத் தொடா்ந்து, முகுல் ரோத்தகி அட்டா்னி ஜெனரலாக அக்டோபா் 1-ஆம் தேதி மீண்டும் பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், ‘அடுத்த அட்டா்னி ஜெனரலாகுமாறு மத்திய அரசு முன்வைத்த பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டேன்’ என்று பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு முகுல் ரோத்தகி ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் கூறினாா்.

2002 குஜராத் கலவர வழக்கு, 2ஜி வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதாடியவா் முகுல் ரோத்தகி என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT